மீண்டும் உயிர்பிக்கும் வழக்கு...செந்தில் பாலாஜி பதவிக்கு வந்த புதிய சிக்கல்...மு.க.ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன?

மீண்டும் உயிர்பிக்கும் வழக்கு...செந்தில் பாலாஜி பதவிக்கு வந்த  புதிய சிக்கல்...மு.க.ஸ்டாலின் எடுக்க போகும் முடிவு என்ன?

அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் மீது இருந்த பண மோசடி வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பணமோசடி குற்றச்சாட்டு:

கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலையை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்போதைய அரசியல் களமே பரபரப்பானது. 

வழக்குப் பதிவு:

இதனையடுத்து, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், அவருடைய தனி உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இது தொடர்பான வழக்குகள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இதையும் படிக்க: பொய்க்கு நோபல் பரிசு..! அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கம்..! வெற்றி களிப்பில் எடப்பாடி பழனிசாமி..!

உயர்நீதிமன்ற தீர்ப்பு:

மேலும் இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஒரு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையின் போது, புகார்தாரர்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தை பெற்றுக்கொண்டு சுமூகமாக இந்த பிரச்னையை முடித்துக் கொள்ள விரும்புவதாக நீதிபதி முன்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு:

இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், 
இன்று இவ்வழக்கு அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. அப்போது சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் தமிழக அரசு தொடங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

செந்தில் பாலாஜிக்கு சிக்கலா?:

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் மூலம் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை தொடரும் என்பதால், இறுதியில் வழங்கப்படும் தீர்ப்பை ஒட்டியே செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் இருப்பதாகவும், அதேசமயம் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாகவும் கூறி வருகின்றனர் அரசியல் வல்லுநர்கள்...