அபார்ஷனுக்குத் தடை விதித்து காலத்தால் பின்னோக்கி சென்ற அமெரிக்கா; அதிர்ச்சிப் பின்னணி!

எங்கே போனது ஃபெமினிசம்; தனது உடல் குறித்த முடிவுகள் கூட எடுக்க முடியாத நிலையில், இன்றைய அமெரிக்க பெண்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பெண்ணியம் செத்துப் போனதா என்ற கேள்வி உருவெடுத்து நிற்கிறது.

அபார்ஷனுக்குத் தடை விதித்து காலத்தால் பின்னோக்கி சென்ற அமெரிக்கா; அதிர்ச்சிப் பின்னணி!

உலகில் முதன் முதலாக பெமினிசம் என்ற சொல் உருவானதே அமெரிக்காவில் தான். பெண்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என போராட்டம் செய்து தங்களது ஓட்டுரிமையைப் பெற்று, உலகத்திற்கே பெண்ணியத்தின் பெருமையை எடுத்துக் காட்டினர்.

வளர்ந்த நாடாக தன்னைத் தானே காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, தற்போது, பின்தங்கிய நாடுகளை விட மேலும் பின்னோக்கி சென்று விட்டது. பெண்கள் தங்களது சொந்த உடல் குறித்த முடிவுகள் கூட எடுக்க முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

பல வருடங்களாக, தங்களது மதத்தை முன்வைத்து பெண்கள் கருகலைப்பு செய்வது மாபெரும் பாவம் எனக் கூறி வந்த கூட்டத்திற்கு இடையில், தங்களது இயலாமை மற்றும் வறுமை காரணமாக பல பெண்கள் அமெரிக்காவில் கருகலைப்பு செய்து வந்தனர். சூழ்நிலை காரணமாக ஒரு சில பெண்கள் சிறு வயதில் கூட பலவந்தப்படுத்தப் படுவதால், கருவுற்று, தங்களது வாழ்க்கையையே இழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. அவர்களது எதிர்காலத்தை எடுத்துக் காட்டுவது இந்த கருகலைப்பு தான். ஆனால், அது புரியாத ஒரு சிலர், தங்களது தனிப்பட்ட கருத்துகளை அடுத்தவர்கள் மீது திணிப்பதோடு, அந்த திணிப்பை பின்பற்றாதவர்களுக்கு சாபம் கூட கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கருகலைப்பிற்கு அனுமதி அளித்த, 1972-இல் வழங்கப்பட்ட ரோ vs வேட் வழக்கின் தீர்ப்பு, தற்போது அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பெரும் கலவரங்கள் அமெரிக்காவின் பல பகுதிகளில் வெடித்துள்ளன.  மேலும், பின்னோக்கி இந்த தீர்ப்பு இருப்பதாக பலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதால், அமெரிக்கா மட்டுமின்றி உலக மக்கள் பலரையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

1972-இல் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி, அமெரிக்காவின் எந்த பகுதியிலும் இருக்கும் பெண்கள், கருகலைப்பு செய்ய முழு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், கருகலைப்பு, அமெரிக்க பெண்களின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. 50 ஆண்டுகளுக்கு முன் எதற்க்காக போராடி வெற்றிப் பெற்று ஒரு தீர்ப்பைப் பெற்றனரோ, அந்த போராட்டம் வலுவிழந்து போனது காலத்தின் முரண்பாடு.  

இதற்கு காரணம் என்ன? என உலக மக்கள் பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், முந்தைய ஆட்சியில், செய்யப்பட்ட பிரச்சாரங்கள் தான் எனக் கூறப்படுகிறது. தற்போது ஆட்சி செய்யும் ஜோ பைடனுக்கு முன், அமெரிக்காவை மோசமான நிலைக்கு கொண்டு போனதாக விமர்சனம் பெற்ற ஆட்சியாளர் தான் டோனால்டு ட்ரம்ப்.  யாராலும் சகிக்க முடியாத பல திட்டங்களைக் கொண்டு வந்து பலரது வெறுப்புகளை ட்ரம்ப் சம்பாதித்தார் என்று சொன்னால், அது அவரது ஆட்சியை விமர்சிப்பதில் மிகையாகாது. இத்தகைய தலைவர் இருந்த போது வந்த பிரச்சாரங்களில் ஒன்று தான் கருகலைப்பிற்கான எதிர்ப்பு. ஆட்சி காலத்தில் மட்டுமல்லாமல், இரண்டாவது முறையாக ஆட்சி பிடிக்க பிரச்சாரம் செய்த போது கூட ட்ரம்ப் கொடுத்த அந்த வாக்குறுதிகளில் ஒன்று, கருகலைப்புக்கு தடை.

தற்போது, 1972ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ரப்பை நீக்கி, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதில் அங்குள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலான மாகாணங்களில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 9 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் கருக்கலைப்பை தடை செய்துள்ளனர். அதில் 3 நீதிபதிகள் டிரம்பிற்கு நெருக்கமானவர்கள் என்றும் டிரம்ப் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. அதாவது நேரடியாக நீதிபதிகள் ஆகாமல் நியமன முறையில் டிரம்ப் மூலம் நீதிபதிகள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அவர்கள் முன்முடிவோடுதான் இந்த வழக்கை அணுகியுள்ளனர் என்றும், இந்த தீர்ப்பை இப்படி வழங்கியதாகவும் புகார் வைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி, கடந்த மாதம் இந்த வழக்கில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சாமுவேல் அலிட்டோவ் என்பவரது தீர்ப்பின் நகலும் லீக்-காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் கருக்கலைப்பிற்கு தடை என்ற வாசகங்கள் இருந்த நிலையில், அதற்கு எதிராக அப்போதே பெண்கள் அங்கு கடுமையாக போராட்டம் செய்தனர். இந்த தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ள நிலையில் பெண்கள் மேலும் போராட்டம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் வரிசையாக பல மாகாணங்கள் அங்கு கருக்கலைப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. அலபாமா, அர்கான்சஸ், கென்டகி, லுய்சியானா, மிசோரி, ஓக்லகோமா, தெற்கு டக்கோடா ஆகிய 7 மாகாணங்கள் முதல் கட்டமாக கருக்கலைப்பை தடை செய்துள்ளது. மேலும், அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 29 மாகாணங்களில் இந்த தடை அமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை எல்லாம் டிரம்பின் குடியரசு கட்சி சேர்ந்த ஆளுநர் மாகாணங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால், ஒரு வேளை தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்கும் பெண்கள் கருகலைப்பு செய்ய முயன்றால், அவர்கள் தடையில்லா மாகாணங்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு, மிசோரி பகுதி பெண்கள், அருகில் இருக்கும், மினிசோட்டா மாகாணங்கள், அதாவது ட்ரம்பின் குடியரசு கட்சியின் ஆளுநர்களுக்கு கீழில்லாத மாகாணங்களுக்கு பயணம் செய்து தான் கருகலைப்பு செய்ய வேண்டும்.

இவ்வளவு அடக்குமுறைகளை கையாண்டு வரும் அமெரிக்க அதிபர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கும் பொது மக்கள் தங்களது எதிர்ப்புகளை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவ்வளவு தவறான செயல் கருகலைப்பு என்றால், அது நடக்காமல் இருக்க, கருத்தடைகளை கொண்டு வர வேண்டும் என்றும், பாதுகாப்பான உடலுறவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், பலாத்காரங்களையும் பலவந்தமான உடலுறவுகளையும் எதிர்த்து கடுமையான சட்டங்கள் வரவழைக்க வேண்டும் என்றும் அனைவரும் சாலைகளிலும் சோசியல் மீடியாக்களிலும் போராடி வருகின்றனர்.

மேம்பட்ட நாடாக இருந்த அமெரிக்க, மக்கள் மனதில் 50 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டது என்பதில் எந்த ஐயமும் இல்லை.