மத்திய அரசின் பணமதிப்பிழப்பு...உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு...உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், அதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு:

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, நாட்டில் அப்போது அதிகம் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மத்திய அரசு, நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

பணமதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள்:

இருந்தபோதிலும், பணமதிப்பிழப்பால் நாட்டில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நஸீர், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணாம் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

இதையும் படிக்க: சீனாவில் உயிரிழந்த தமிழ்நாட்டு மாணவன்...மத்திய, மாநில அரசுக்கு பெற்றோர் கோரிக்கை...!

தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்:

தொடந்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையில் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணமதிப்பிழப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 2016 ஆம் ஆண்டு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஆலோசனை:

தொடர்ந்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பின்னரே பணமதிப்பிழப்பை  மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. எனவே, மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் எந்தவிதமான தவறும் இல்லை எனவும், மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.