கமிஷனுக்கு ஆசைப்பட்டு எடுத்த விபரீத முடிவு.. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தின் நிலை என்ன?

சென்னையில் அதிக கமிஷன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி 90 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.  

கமிஷனுக்கு ஆசைப்பட்டு எடுத்த விபரீத முடிவு.. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தின் நிலை என்ன?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் ஞானதுரை. இவர் ICICI Direct.com என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய இயலாத சூழலில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று வங்கியில் செலுத்தி அதற்கான ஆவணங்களை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து தனக்கான கமிஷனை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுமார் 70 வாடிக்கையாளர்களிடம் பெற்ற 90 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்த ஆல்வின் முனைந்தபோது, அவருக்கு அறிமுகமான ஐயப்பந்தாங்கலைச் சேர்ந்த பாதிரியார் பாலன் மற்றும் இடைத்தரகரான வேலாயுதம் ஆகிய இருவரும் வங்கியில் செலுத்தும் பணத்தை தங்களுக்குத் தெரிந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த நவாஷ் என்பவரிடம் கொடுத்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

மேலும், நவாஷ் அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருவதால் அவ்விருவரும் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நேற்று மாலை ஆல்வின் ஞானதுரை 90 லட்சம் ரூபாய் பணத்தையும் நவாஷை ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பணத்தை எண்ணிவிட்டு வருவதாகக் கூறி கீழே சென்ற நவாஷ் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த ஆல்வின் ஞானதுரை நவாஷை தேடியபோது அவர் அங்கு இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து ஆல்வின் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் நவாஷை அறிமுகம் செய்து வைத்த பாலன் மற்றும் வேலாயுதம் ஆகிய இருவரையும் பிடித்து நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆல்வின் ஞானதுரையிடம் புகாரைப் பெற்ற போலீசார் 90 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான அனைத்து மக்கள் ஜனநயகக் கட்சி தலைவரான நவாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

கமிஷனுக்கு ஆசைப்பட்டு எடுத்த விபரீத முடிவால் தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்கள் பணத்தின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.