ஹெச்.ராஜா தோல்விக்கு காரணம் அவரது மருமகன்..! தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது..!

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது..!

ஹெச்.ராஜா தோல்விக்கு காரணம் அவரது மருமகன்..! தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது..!

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என திமுகவினர் பலர் கூறுவதை பார்த்திருப்போம். பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கூறுவதை கேட்டிருப்போம். இணையங்களில் பாஜகவை எதிர்ப்பவர்கள் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்வதை பார்த்திருப்போம்.. ஆனால் இப்போது பாஜகவினரே இதனை கூறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு காலகட்டத்தில் இணையவாசிகளுக்கு கடவுளாக திகழ்ந்தவர் என்றால் அது ஹெச்.ராஜா. இவர் பேசும் இந்து சயமத்தை சார்ந்த பேச்சும், எதிர்த்து கேள்வி கேட்பவர்களை ஆண்டி இந்தியன் எனக் கூறுவதும் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது. பாஜகவின் தேசிய செயலாளராக இருந்த ஹெச்.ராஜா, தற்போது எவ்வித பதவியும் இன்றி பாஜக ஆதரவாளராக காரைக்குடியில் செட்டில் ஆகி விட்டார். 

இருப்பினும் அவ்வப்போது அரசின் நடவடிக்கைகளுக்கு பொங்கும் ஹெச்.ராஜா மீது தற்போது மோசடி புகார்கள் எழுந்துள்ளன. அதுவும் அவரது ஆதரவாளர்களும், பாஜக நிர்வாகிகளுமே இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்பது தான் ஆச்சர்யமான விஷயம். 

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் களமிறங்கினார் ஹெச்.ராஜா. தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், இம்முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக ஓட்டுகளை நம்பி போட்டியிட்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் தன்னுடைய தோல்விக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளே காரணம் என கொம்பு சீவினார் ஹெச்.ராஜா. 

தவளை தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு சொந்தக்காரர் ஹெச்.ராஜா என்றால் மிகையாகாது. சும்மா இருந்தவர்களை சீண்டிவிட்டதன் விளைவாக, குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகள் கட்சி மேலிடம் தேர்தலுக்காக கொடுத்த ரூ.13 கோடியைஹெச்.ராஜா செலவு செய்யாமல் ஆட்டைய போட்டதாக புகார்களை அனுப்பினர். 

ஆதாரமாக தேர்தலுக்காக வழங்கப்பட்ட பணத்தில் சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 கோடிக்கு வீடு கட்டுவதாகவும், எருமைப்பட்டி தோட்டத்தில் பண்ணை வீடு கட்டுமானப் பணிகள் நடப்பதாகவும் கூறினர். இந்த புகார்கள் குறித்து விசாரிக்கப்படும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். விசாரணையும் நடைபெற்றது. திடீர் திருப்பமாக ஹெச்.ராஜா மீது புகார் தெரிவித்த காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு மண்டல் தலைவர் பாலமுருகன், கண்ணங்குடி மண்டல் தலைவர் பிரபு ஆகிய 3 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்தார். 

அதிர்ச்சியடைந்த மூவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, விசாரணை செய்ய வந்த மாநில நிர்வாகிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினர். புகார் தெரிவித்தவர்களிடம் விசாரிக்காமல், ஹெச்.ராஜா  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஹெச்.ராஜாவின் நிர்பந்தம் காரணமாக தங்களை நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். 

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் அவரது மருமகன், ஆ.எஸ்.எஸ் நிர்வாகி சூரியநாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் தான் இருந்ததாகவும், தோல்விக்கு முழு காரணம் ஹெச்.ராஜா மற்றும் அவரது மருமகன் தான் எனவும் அவர்கள் அழுத்தம் திருத்தமாக புகார் தெரிவித்தனர். 

அடிமட்ட தொண்டர்களை ஹெச்.ராஜா கெடுக்க நினைக்கும் வரை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் பாஜக வளராது, தாமரை மலரவே மலராது எனக் கூறியது அங்கிருந்தவர்களை சிந்திக்க வைத்தது. வர உள்ள நகராட்சி தேர்தலில் நான் நிறுத்தும் வார்டு தலைவரை கூட அவர் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது என காரைக்குடி மண்டல தலைவர் சந்திரன் தெரிவித்தார். இதுநாள் வரை மக்கள் மற்றும் எதிர்கட்சியை சார்ந்தவர்களிடம் மட்டுமே எதிர்மறையான கருத்துகளை பெற்று வந்த ஹெச்.ராஜா, தற்போது பாஜக நிர்வாகிகளிடமே இவ்வாறான கருத்துகளையும், புகார்களையும் பெற்றதால், அவருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் மேலும் சரிய வாய்ப்புள்ளது.