தேசியக்கொடி இனி இரவிலும் பறக்கலாம்....மத்திய அரசு அறிவித்தது சாத்தியமாகுமா...?

தேசியக்கொடி இனி இரவிலும் பறக்கலாம்....மத்திய அரசு அறிவித்தது சாத்தியமாகுமா...?

இந்திய மூவர்ணக்கொடி:

தேசிய கொடி என்பது ஒரு நாட்டின் சுதந்திர உணர்வையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாகும். இந்த கொடிக்காக நம் சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் துறந்துள்ளனர். அதே சமயம் இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்றும், இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கொடியை இறக்கி நம் மூவர்ணக்கொடியை ஏற்றுவதற்காகவும் சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுபட்டனர். 

மூவர்ணக்கொடி ஏற்றிய நாள்:

இந்திய சுதந்திர அடைவதற்கு முன்னரே அதாவது 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 ல் நம் மூவர்ணக்கொடி இந்திய தேசியக்கொடி என்ற அங்கீகாரத்தை பெற்று விட்டதால், இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேய கொடியை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவின் அடையாளமாய் கம்பீரமாக செங்கோட்டையில் ஏற்றினர். நம்முடைய வீரர்களின் தியாகத்துக்கு ஒரு பரிசாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.

மூவர்ணக்கொடியின் அம்சம்:

இந்திய தேசியக்கொடியின் அமைப்பு என்பது காவி, பச்சை, வெள்ளை நிறத்தால் ஆனது. அந்த நிறத்தின் அம்சம் என்பது மிக முக்கியமானதாகும். ஒவ்வொன்றும் ஒரு பொருளை குறிக்கும். அதாவது, காவி நிறம் - பலத்தையும், தைரியத்தையும் குறிக்கும், 
வெண்மை நிறம் - உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் - வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. நடுவில் இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், வாழ்க்கை சுழற்சியை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

கையாளும் முறை:

இந்திய தேசியக்கொடியை காதி என்ற கைத்தறியில் மட்டுமே அமைக்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்று. ஏனென்றால், மூவர்ணக்கொடியை உருவாக்குவதன் மூலம் நெசவாளர்கள் அனைவரையும் ஊக்குவிப்பதால் அது தேசியக்கொடிக்கு ஒரு பெருமையாக கருதப்படுகிறது. அதேபோன்று, தேசியக் கொடியை கையாளவும் அதற்குரிய மரியாதை செலுத்துவதும் மிக முக்கியமான கடமையாக பார்க்கப்படுகிறது. தேசிய கொடியை ஏற்றினால், சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் இறக்குவது என்பது மிக முக்கியம்.

தேசிய கொடியை ஏற்றுவது எப்போது:

இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி பிரதமர் டெல்லியிலும், மாநிலங்களில் முதலமைச்சரும்,  இந்திய குடியரசு நாளான  ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தலைவர் புதுடெல்லியில் உள்ள ராஜ்பாத்திலும் , ஆளுநர் ஆளுநர் மாளிகையிலும் கொடியை பறக்கவிடுவார்கள். அதிலும் சுதந்திர தினத்தன்று கம்பத்தில் கீழிலிருந்து மேலாக ஏற்றுவர். ஆனால் குடியரசு தினத்தன்று ஏற்கனவே இந்தியா சுதந்திரம் அடைந்ததால் கம்பத்தின் மேல் இருக்கும் கொடியை அப்படியேவும் பறக்க விடுவார்கள்.

யாருக்கெல்லாம் இறந்த பிறகு தேசியக்கொடி போத்தப்படும்?:

”காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளைத் தவிர, பதவிகளை வகித்த அல்லது பதவியில் உள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், முதலமைச்சர் மரணமடையும் போது  அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. மேற்கூறிய வகைகளைச் சேராத ஒருவர் மரணமடைந்தால் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவிக்கவேண்டும். அப்போது, அவர்கள் மீது தேசியக் கொடியை போர்த்துவார்கள்” இவையெல்லாம் தேசிய கொடியின் பெருமைகளை உணர்த்துகிறது.

தேசியக்கொடியை எப்படியெல்லாம் உபயோகிக்கக்கூடாது:

நம் உயிருக்கும் மேலாக மதிக்கும் இந்திய மூவர்ணக்கொடியை எந்தவித விளம்பரத்துக்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதேபோன்று, தேசியக் கொடியைக் கிழிக்கவோ, எரிக்கவோ, அவமதிப்பதோ என்பது  தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அதே சமயம் நிலத்திலோஅல்லது தண்ணீரிலோ, அறைகம்பத்திலோ பறக்கவிட கூடாது. இவையெல்லாம் நாம் தேசியக்கொடிக்கு செய்யக்கூடிய அவமதிப்பாகும். 

தேசியக்கொடியை இனி இரவிலும் பறக்கவிடலாம்:

இப்படி உயிருக்கு மேலாக கருதி இவ்வளவு மரியாதை செலுத்தப்படும் இந்த மூவர்ணக்கொடியை வருகிற 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இனி இரவிலும் பறக்க விடாலம் என்ற புதிய திருத்தத்தை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். இது சாத்தியம் ஆகுமா? என்று சமூக ஆர்வலர்கள் இணையதள பக்கத்தில்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால், நம் இந்திய தேசியக்கொடி அங்கீகாரம் பெற்றதில் இருந்தே, தேசியக்கொடியை கம்பத்தில் பறக்கவிட்டால் மாலை சூரியன் அஸ்தமனம் ஆவதற்குள் கொடியை இறக்கிவிட வேண்டும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அது ஒரு மரியாதையாகவும் கருதப்படுகிறது. 

கட்சி கொடிகள்:

நம் நாட்டில் கட்சி கொடிகளை பார்த்தோம் என்றால் 24 மணிநேரமும் கம்பத்தில் பறக்கவிடுகின்றனர். ஆனால் அந்த கொடிகள் பல விஷயங்களில் சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது நம் நாட்டின் உயிராக பார்க்கப்படும் மூவர்ணக்கொடியை 24 மணிநேரமும் பறக்கவிட்டால் கட்சி கொடிக்கு ஏற்படுவது போன்ற அவலநிலை தேசிய கொடிக்கு ஏற்படாதா என்ற கேள்விகள் எழும்புகிறது. 

சாத்தியம் ஆகுமா?:

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திர தின அமுதப்பெருவிழா எனக்கூறி ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுகள்தோறும் மூவர்ணக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்நிலையில் தற்போது 2002ம் ஆண்டு இந்தியக் கொடி குறியீட்டில் உள்துறை அமைச்சகம் ஒரு புதிய திருத்தம் கொண்டு வந்து, அதன்படி இரவிலும் இனி தேசியக்கொடியை பறக்க விடலாம் என மோடி அறிவித்திருப்பதை பலர் ஆதரித்தாலும், சமூக ஆர்வலர்கள் பலரும் இதனை எதிர்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இரவில் பறக்க விடலாம் என்பதற்கான காரணம் என்னவென்றும் கேள்வி எழுப்புகின்றனர்.