கொரோனா பேரிடர் காலத்தில் மகளிருக்கு கைகொடுத்த தொழில்... !!

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம் என்று மாநில ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

கொரோனா பேரிடர் காலத்தில் மகளிருக்கு கைகொடுத்த தொழில்... !!

கொரோனா பேரிடர் காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் சரியான வாழ்வாதாரம் இன்றி நிர்கதியாகினர்.இதில் பலர் கடன் சுமையால் தன் வாழ்வை மாய்த்து கொண்டும் உள்ளனர்.

இதற்கிடையே,நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பலர் தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் திண்டாடி வந்தனர்.இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அவர்களுக்கு,உரிய பயிற்சிகளுடன் கூடிய கைத்தொழிலை கற்றுக்கொடுத்து,நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் பணியில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடனில் தத்தளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழை நாரில் இருந்து கூடை தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொடுத்து நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

இவர்கள் தயாரிக்கும் வாழை நார் கூடைகள் புதுக்கோட்டையிலிருந்து பிரான்ஸ் உள்பட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.இதனால்,மகளிருக்கு தினமும் 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை ஊதியம் கிடைக்கின்றது.

இது குறித்து மாநில அளவிலான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறியபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களில் 1,560 மகளிர் சுய உதவி குழுக்கள் இருந்து வருகிறது.

ஆனால்,அவர்களில் பாதி பேர் கொரோனா காலத்தில் கடன் சுமையால் தத்தளித்து வந்தனர்.இந்த நிலையில்,’மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்’ என திட்டமிட்டோம்.

அதன்படி வாழை நார் மூலம் கூடை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்தது. இதன்மூலம் மகளிருக்கு தினமும் ரூ.200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெறுவதுடன் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும்,இந்த தொழில்கள் செய்வதன் மூலம் சுயதொழில் என்றால் என்ன? ,அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்து, சுயஉதவிக்குழு பெண்களின் கணவர்களும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்து குடும்ப வருமானத்தை ஈட்டி வருகின்றனர். பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெற்று கடன் தொந்தரவுகள் இல்லாமல் சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை நாங்கள் வளர்த்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.