அதிமுகவில் ஓபிஸ், இபிஎஸ்க்கு இடமே இல்லை... சசிகலாவின் புரட்சி பயணம் ஆன்மீக பயணமாக - புதிய விவாதத்தை கிளப்பும் கே.சி.பழனிசாமி..!

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள போது ஓபிஸ், இபிஎஸ் தங்களது சுயலத்திற்காக கட்சியை கோமா நிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். என்னை போன்று எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர்களால் தான் கட்சியின் பொது செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அதிமுகவில் ஓபிஸ், இபிஎஸ்க்கு இடமே இல்லை... சசிகலாவின் புரட்சி பயணம் ஆன்மீக பயணமாக - புதிய விவாதத்தை கிளப்பும் கே.சி.பழனிசாமி..!

தன்னுடைய 13 வயதில் எம்.ஜி.ஆரின் அதிமுகவில் சேர்ந்து. 23 வயதில் இளைஞரணியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டு, தனது 24 வயதில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான இளம் நபர் என்ற பெருமையைப் பெற்ற கே.சி.பழனிசாமியிடம், அதிமுகாவில் நடக்கும் குழப்பங்கள் குறித்து மாலை முரசு இணையதளத்தில் இருந்து தொலைபேசி நேர்காணல் நடத்தப்பட்டது. அந்த நேர்காணல்:

ரேவதி: ஜூலை 11 ஆம் தேதி நடக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ள அதிமுக பொதுகுழுக் கூட்டம் நடைபெறுமா?

கே.சி.பி: அதிமுக பொதுகுழுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் எடப்பாடி தரப்பினர். பொதுக்குழுவிற்கான தேதியை முடிவு செய்துவிட்டு அனுமதி கேட்பது என்பது எவ்வாறு சரி ஆகும். அனுமதி வாங்கிவிட்டு அல்லவா பொதுகுழுக் கூட்டத்திற்கான தேதியை முடிவு செய்திருக்க வேண்டும்! நீதிமன்றம் அதை விசாரித்து தனது தீர்ப்பை வழங்க சில நாட்கள் ஆகும் அல்லது அதை தேர்தல் ஆணையத்திடம் அனுப்பிவைக்கும் வாய்ப்பு உள்ளது. 

ரேவதி: நீதிமன்றமோ அல்லது தேர்தல் ஆணையமோ ஜூலை 11 வரை எந்த தீர்ப்பையும் வழங்கவில்லை எனில் பொதுகுழுக் கூட்டம் நடைபெறுமா?

கே.சி.பி: நீதிமன்றம் அந்த மனுவிற்கு என்ன பதில் அளிக்கும் என்பது நிச்சயமாக நமக்கு தெரியாது. தேர்தல் ஆணையத்திடம் சென்றாலும் பதில் வர தாமதமானால் வழக்கு விசாரணையில் இருக்கும் பொது கூட்டத்தை நடத்த கூடாது. நடத்த முடியாது. 

ரேவதி: அதிமுகவின் ஒற்றை தலைமையாக இபிஎஸ் வரும் முயற்சி வெற்றிபெறுமா?

கே.சி.பி: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு உயில் எழுதி வைத்துள்ளார் அதை தற்போது நான் தான் சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன். என்னுடைய ட்விட்டர் பதிவில் அந்த உயிலை பதிவிட்டு உள்ளேன். 1987 ஜனவரி 01 ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ள அந்த உயிலில், கட்சியில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அவர்கள் தான் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என எழுதி உள்ளார். கட்சியின் பொதுக்குழு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால் பொதுச்செயலாளர் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.பொதுச் செயலாளர் யார் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என புரட்சித்தலைவர், அம்மா எழுதிய விதியை இவர்கள் தங்களின் சுயநலத்திற்காக மாற்றிவிட்டு இருக்கிறார்கள். யார் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்பதை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அது எம்.ஜி.ஆர் அவர்களின் விதிப்படி நடக்க வேண்டும். அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கட்சியில் இருக்க தகுதி அற்றவர்கள்.

ரேவதி: எம்.ஜி.ஆர். வகுத்துள்ள விதிகளின் படி இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்காமல் இருப்பாரா? இல்லை புது விதிகளை புகுத்துவாரா?

கே.சி.பி: இபிஎஸ் தனது சுயநலத்திற்காக கட்சியை சிதைத்துக் கொண்டு உள்ளார். அதே நேரம் ஓபிஸ்ஸும் கட்சித் தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இல்லை. தொண்டர்களின் அனுதாபத்தை வேண்டுமானால் பெற்றவராக இருக்கிறாரே தவிர நம்பிக்கையை பெறவில்லை. இபிஎஸ் ஐ எதிர்ப்பவர்கள் கூட ஓபிஸ்-க்கு ஆதரவளிக்க மறுக்கிறார்கள். 

ரேவதி: தொண்டர்களுக்கு இருவரும் வேண்டாம் என்றால் மூன்றாவதாக புதிய தலைமையை எதிர்பார்கிறார்களா?

கே.சி.பி: நிச்சியம் மூன்றாம் தலைமை வேண்டும். தொண்டர்களின் மன நிலையும் அதுவாகவே உள்ளது. இருவருமே மாறி மாறி பாரதிய ஜனதா கட்சியிடம் அண்ணா திமுகவை அடகு வைப்பார்கள், இவர்களும் அடிமைகளாக இருப்பார்கள். தொண்டர்கள் எதிர்பார்ப்பது யாருக்கும் அடிமையாக இல்லாமல் சுயமாக செயல்படும் தலைவரை தான். அது இபிஎஸ் உம் இல்லை, ஓபிஸ் உம் இல்லை, சசிகலாவும் இல்லை.

ரேவதி:சசிகலா புரட்சி பயணம் என்று அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளாரே. இது அதிமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

கே.சி.பி: அந்த புரட்சி பயணம் ஆன்மீக பயணமாக மட்டுமே இருக்கும். அதிமுக கட்சியில் யார் ஆன்மீக சிந்தனையில் அதிக நாட்டம் கொண்டுள்ளார்களோ அவர்கள் மட்டுமே சசிகலாவின் பின்னல் செல்வர். அதிமுகவின் தலைவராக இனி ஒரு போதும் சசிகலா வர முடியாது.

ரேவதி: புதிய தலைமை என்றால் யார் வருவதற்கு வாய்ப்பு உள்ளது? அல்லது யார் வந்தால் சிறப்பாக இருக்கும்?

கே.சி.பி: அது தொண்டர்களின் கையில் தான் உள்ளது. அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் தான் வர முடியும். கட்சியில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு உண்மை தொண்டன் தான் வர முடியும். அதற்கான தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் நான் அந்த தேர்தலில் போட்டியிடுவேன்.

ரேவதி: புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் என்பது தற்போது சாத்தியமா? அதற்கான வாய்ப்பு உள்ளதா?

கே.சி.பி: தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். இணையவழி சந்திப்பின் மூலமாக தொண்டர்களிடத்தில் தேர்தலுக்கான பேச்சுகளை நடத்தி வருகிறோம்.

ரேவதி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இபிஎஸ் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் என்று கூறியுள்ளாரே?  

கே.சி.பி: சென்னை உயர்நீதிமன்றத்துல அப்போ நீதி அரசர் துரைசாமி கொடுத்த தீர்ப்பில் ஓபிஸ் ஒருங்கிணைப்பாளர், இபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதன் மேல் முறையீடு தான் தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் தான் அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்படி வழக்கு நீதிமன்றத்தில் உள்ள போது இருவரும் தங்களது சுயலத்திற்காக கட்சியை கோமா நிலைக்கு கொண்டு சென்று உள்ளனர். என்னை போன்று எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர்களால் தான் கட்சியின் பொது செயலாளர் யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.