2-வது கணவரை பிரியும் கௌசல்யா..! ஒரு வருடம் மனதளவில் பாதிக்கப்பட்டதாக பதிவு..!

பிரிவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உடனே நீக்கம்..!

2-வது கணவரை பிரியும் கௌசல்யா..! ஒரு வருடம் மனதளவில் பாதிக்கப்பட்டதாக பதிவு..!

2016-ம் ஆண்டு தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் என்றால் கௌசல்யா-சங்கர் ஆணவப் படுகொலை தான். மாற்று சமூகத்தை சேர்ந்த பையனை திருமணம் செய்ததற்காக, பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்வதற்காக பெற்றோர்களே கூலிப்படையை ஏவினர். இதில் நட்ட நடு சாலையில், பேருந்து நிலையத்தில், நடைபெற்ற இந்த கொலை வெறித் தாக்குதலில், சங்கர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயங்களுடன் கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது இவர்களது பேச்சை நாம் நினைத்து பார்க்க என்ன இருக்கிறது? என்ன நடந்தது? என்பது குறித்து பார்க்கலாம்..

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவரும், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமியின் மகளான கௌசல்யாவும் காதலித்து வந்திருக்கின்றனர். பட்டியலினத்தை சேர்ந்த சங்கரை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்த கௌசல்யாவின் பெற்றோர், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய கௌசல்யாவும்-சங்கரும் திருமணம் செய்துக் கொண்டு தனியே வாழ்ந்து வந்தனர். 

சாதி மறுப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத கௌசல்யா பெற்றோர், இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டி, கூலிப்படையை ஏவினர். அதன் படி, கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் மீதும் கௌசல்யா மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், கௌசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கோர சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி தமிழ்நாட்டையே கலவர பூமியாக்கியது. பலரும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். 

இந்தப் படுகொலை தொடர்பாக கௌசல்யாவின் பெற்றோர் உட்பட 11 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2017- ஆண்டு திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், முதல் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டி மா.மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. 

இதில் கௌசல்யாவின் தாயார், தாய்மாமன், கல்லூரி மாணவர் ஆகிய 3 பேரை திருப்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. தூக்கு தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பானது 2020-இல் ஜூன் 22-ம் தேதி, வெளியானது. அதன் படி,  இவ்வழக்கின் முதல் குற்றவாளியான கெளசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள ஜெகதீசன், பழனி எம். மணிகண்டன், பி. செல்வக்குமார், தமிழ் (எ) கலைதமிழ்வாணன், மதன் (எ) எம். மைக்கேல் ஆகிய ஐந்து பேரின் தூக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

இந்த சம்பவத்திற்கு பிறகு, கௌசல்யாவிற்கு மாதம்தோறும் 11,250 ரூபாய் ஓய்வூதியமும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்குச் சத்துணவுத் துறையில் வேலையும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. 2018-ல் ’’சங்கர் சமூக நீதி அறக்கட்டளை’’ என்ற பெயரில் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி நடத்தி வந்தார் கௌசல்யா. தனது தோற்றத்தை மாற்றிக் கொண்ட கௌசல்யா, சாதி மறுப்பு திருமணம் குறித்தும், சாதி பாகுபாடு குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இப்படி சென்றுக் கொண்டிருந்த வேளையில், கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த, ’’தமிழக பாரம்பரிய கல்யான பறை இசை’’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சக்தி என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு சுய மரியாதை முறையில் திருமணம் செய்துக் கொண்டனர். 

வழக்கத்திற்கு மாறாக எவ்வித அலங்காரமும் இன்றி, ஜீன்ஸ், சட்டையில், பறை இசை முழங்கும் சமயத்தில் இருவரும் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், இறந்து போன சங்கரின் தந்தை, சகோதரர்கள், பாட்டி ஆகியோரும் இந்த மறுமணத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை மணமக்களுக்கு தெரிவித்தனர். இந்த காலகட்டத்திலேயே, சக்தி மீது பல்வேறு வகையான எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. சக்தி பெண்கள் விஷயத்தில் சற்று மோசமாக இருந்தவர் என்றும், பல பெண்களை ஏமாற்றியவர் என்றும் அரசல் புரசலாக பேச்சுகள் எழுந்தன. 

இவற்றையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாது தனது வாழ்க்கையை சக்தியோடு பகிர்ந்துக் கொண்டு வந்த கௌசல்யா, தற்போது சக்தியை பிரிய போவதாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ’’நானும், சக்தியும் பிறிகிறோம், ஓராண்டாக மனதளவில் எண்ணை காயப்படுத்தியதால் இனி அவரோடு என்னால் வாழ இயலாது, விவாகரத்துக்கு திங்கள் விண்ணப்பிக்கிறேன்’’ என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, பின்னர் சில மணி நேரத்தில் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூக வளைதங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.