விருமன் புளித்துப் போய் விட்டது..! ஒன்லைன் முதல் வழக்கு வரை..!

விருமன் புளித்துப் போய் விட்டது..!  ஒன்லைன் முதல் வழக்கு வரை..!

நடிகர் கார்த்தி - இயக்குநர் முத்தையா கூட்டணியில் வெளியாகியுள்ள விருமன் திரைப்படத்தின் மூல கதை, தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 

ஆணாதிக்க மனநிலை:

’மண்வாசனை வீசும் கிராமத்துக்கதை என்ற போர்வையில், இன்னும் எத்தனை நாளுக்குத்தான், பிற்போக்குத்தனமான, ஆணாதிக்க மனநிலையிலேயே படமெடுப்பீர்கள் முத்தையா?’ என்று ’விருமன்’ படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஒருபுறம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மறுபுறம், தனது கதையை திருடி படமெடுத்து விட்டதாக முத்தையா மீது வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குநர் துரை.

மேலும் படிக்க: கைதி-2 கண்டிப்பா வருதாமே.. இயக்குநரே வாய்திறக்கல..ஆனால் இவரு உண்மையை உடச்சுட்டாரே..!

நோகாமால் நுங்கு திண்ணும்  சம்பவங்கள்:

4 ஹிட் படங்களை கொடுத்து, கோடிகளில் சம்பளம் வாங்குமளவுக்கு பிரபலமாகி விட்ட இயக்குநர்கள், கைவசம் இருந்த நல்ல கதைகள் எல்லாம் காலியாகி விட்ட நிலையில், ‘அடுத்ததும் ஹிட் கொடுக்க வேண்டுமே’ என்ற அழுத்தத்தில், உதவி இயக்குநர்களின் கதையை திருடி, பெரிய நடிகர்களை வைத்து படமாக்கி, நோகாமால் நுங்கு திண்ணும்  சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

முதல் முறை அல்ல, இரண்டாம் முறை:

அப்படி லேட்டஸ்ட்டாக, கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளவர் தான் இயக்குநர் முத்தையா. ’அடடே... இவரா? கிராமத்துப் படங்கள் எடுப்பதில், இவர் கைதேர்ந்தவராச்சே’ என பலரும் நினைக்கலாம். ஆனால், தன்னுடைய இரண்டாவது படத்திலேயே கதை திருட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் தான் முத்தையா. 2013-ல் சாதிப்பெருமை பேசும் ’குட்டிப்புலி’ என்ற காவியத்தை படைத்த முத்தையா, அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் கைக்கோர்த்து கடந்த 2014ஆம் ஆண்டில் கொடுத்த படம் தான் ’கொம்பன்’. இரண்டாவது படத்திலேயே முத்தையாவின் குட்டு வெளியானது.

கொம்பன் - துரை:

தன்னுடைய கதையைத் திருடி அதில் சில மாற்றங்கள் செய்து, கொம்பன் படத்தை உருவாக்கி இருப்பதாக உதவி இயக்குநர் துரை என்பவர் முத்தையா மீது புகார் அளித்தார். சிலபல பஞ்சாயத்துகளுக்குப் பிறகு வெளியான அப்படம் வெற்றியும் பெற்றது. அறியாமையில் சுயசாதி பெருமை பேசும் இளசுகள், முத்தையாவின் படங்களை கொண்டாடினாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல, இவரது படங்களில் பழமைவாதமும், ஆணாதிக்க புத்தியும், சாதிப்பெருமையும் மண்டிக்கிடப்பதாக, விவரம் அறிந்தவர்கள் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருவதுண்டு.

சாதிப்பெருமையை கலந்து விஷம் பாய்ச்சல்:

ஸ்டுடியோக்களிலும், நகரங்களிலும் சுற்றி வந்த கேமராக்களை, கிராமத்து பக்கம் கொண்டு சென்று, யதார்த்த வாழ்வை படம்பிடித்து காட்டியவர் இயக்குநர் பாரதிராஜா. ஆனால் அந்த கிராமத்து மண்ணில் வீசும் தென்றல் காற்றில், சாதிப்பெருமையை கலந்து விஷம் பாய்ச்சி வருவதாக வலைத்தளவாசிகள் குற்றஞ்சாட்டும், முத்தையாவின் அடுத்த படமான ’விருமன்’ படத்தின் கதையும் தன்னுடையது தான் என மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளார், அதே உதவி இயக்குநர் துரை. 

ஒரு கதையில் இரண்டு படம்ஙகள்:

நடிகர் கார்த்தியின் உறவினரும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் உரிமையாளருமான, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் தன்னுடைய கதையை கொடுத்ததாகவும், இயக்குநர் முத்தையா, அந்த கதையை வாங்கி இரண்டாகப் பிரித்து, சிறுசிறு மாற்றங்களைச் செய்து, கார்த்தியை வைத்தே, கொம்பன், விருமன் என இரண்டு படங்களாக உருவாக்கி விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது...!

’விருமன்’ புளித்துப் போய் விட்டது:

இதனிடையே படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்ட நிலையில், குடும்பம், உறவு, பாசம் என்ற பெயரில், மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கும் முத்தையாவின் இந்த ’விருமன்’, புளித்துப் போய் விட்டதாக நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விருமன் கதை:

தவறு செய்யும் பிள்ளைக்கு புத்திமதி சொல்லும் தந்தையை பார்த்திருப்போம். ஆனால், தவறான வழியில் செல்லும் தந்தைக்கும், அப்பாவை எதிர்க்கும் பிள்ளைக்குமான மோதல் தான் விருமன் படத்தின் கதையாம்.

ஒன்லைன்:

’தன்னுடைய அம்மாவின் மரணத்திற்கு காரணமான அப்பாவை பழி வாங்கத்துடிக்கும் மகனின் கதை’ என்ற ஒன்லைன், பிரபுவின் ’கும்மிப்பாட்டு’ படத்தையும், ’அப்பா மகனுக்கு இடையிலான டாம் அண்ட் ஜெர்ரி டைப் மோதல்’, ரஜினியின் ’மாப்பிள்ளை’ படத்தையும் நினைவூட்டுவதாகக் கூறும் சமூக வலைத்தளவாசிகள், ’குடும்பம், உறவு, பாசம் என்ற பெயரில், ”ஆம்பளைன்னு நிரூபி, இல்லன்னா சேலையைக் கட்டிக்கோ”, ”பொம்பளைகளை ஏன் முன்னாடி நடக்கவிடறோம் தெரியுமா?”, ”பொஞ்சாதின்னா...” என பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்க மனநிலையில் அமைக்கப்பட்ட வசனங்கள் என, வழக்கமான முத்தையா சினிமேட்டிக் யுனிவர்ஸின் புதிய படமான 'விருமன்' ரசிகர்களை வெறுப்பேற்றுகிறான் எனவும் கூறுகின்றனர்.