களேபரம் ஆன கூட்டத்தொடர்...சபாநாயகர் சொன்ன 89 ஆம் ஆண்டு என்ன நடந்தது...?

களேபரம் ஆன கூட்டத்தொடர்...சபாநாயகர் சொன்ன 89 ஆம் ஆண்டு என்ன நடந்தது...?

சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர்:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தை குறுக்கீடு செய்த எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள், இருக்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதற்கு கேள்வி நேரம் முடிந்ததும் அதுபற்றி விவாதிக்கப்படும் என சபாநாயகர் கூறியும், அதனை ஏற்காத பழனிசாமி தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சலும் பரபரப்பும் நீடித்து காணப்பட்டது. 

தொடர் அமளி:

இதனையடுத்து ஈபிஎஸ் தரப்பினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அப்பாவு, அவையின் மாண்பை குலைக்க வேண்டாம் என எச்சரித்ததோடு, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை பேசவிடாமல் இடையூறு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார். இருப்பினும், பழனிசாமி தரப்பினர் அதனை ஏற்காமல் அமளியில் ஈடுபட்டனர். 

குற்றம் சாட்டிய அப்பாவு:

சட்டப்பேரவையில் கலகம் செய்யும் நோக்கத்துடனே ஈபிஎஸ் தரப்பினர் வந்துள்ளதாக குற்றம் சாட்டிய சபாநாயகர், இன்றைய கூட்டத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மானம் குறித்தும், அருணா ஜெகதீசன் அறிக்கை, ஆறுமுகசாமி ஆணைய தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதால், அதனை தவிர்க்கவே ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டு கலகம் செய்கிறீர்கள் என்று கூறினார். தொடர்ந்து, ஜானகி பதவி பிரமானம் எடுத்த போதும், 1989 ல் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுப்பட்டதைப் போல இன்றைய தினம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்அமளியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டினார். அன்றைய கரும்புள்ளிகள் தினத்தை போன்று இன்றைய தினத்தை மாற்றிவிடாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை...நாளை விவாதிக்கப்படும்...!

1989ல் நடந்தது என்ன?:

தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள் என்றே சொல்லலாம். 1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுக அரசுக்கு அன்று தான் பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். அப்போது முதலமைச்சரும், நிதியமைச்சருமாக இருந்த கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்தார்.

உடனே, அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா குறுக்கீட்டு எழுந்து ”முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்ற ஓர் அறிக்கையை வாசிக்க தொடங்கினார். அதுமட்டுமின்றி, தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'அதற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று உரிமை மீறல் பிரச்னையையும் ஜெயலலிதா எழுப்பினார்.

இதனால் ஆத்திரமடைந்த கருணாநிதி, மைக்கை கையால் மூடிக்கொண்டு ஏதோ சத்தமாக திட்டியுள்ளார். இதனையடுத்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் முன்னேறி சென்று கருணாநிதி கையில் இருந்த பட்ஜெட் உரையை கிழித்து எறிந்தனர். அப்போது  நடந்த களேபரத்தில் சட்டசபையே அமளி துமளி ஆனது. 

இந்தபின்னணியில், இன்று சட்டசபையில் ஈபிஎஸ் தரப்பினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், ஜானகி பதவி பிரமாணம் போதும், 1989 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த கருணாநிதியின் பட்ஜெட் உரை கிழிக்கப்பட்ட நாளையும் கரும்புள்ளி நாளாக சட்டசபையில் குறிப்பிட்டு பேசிய அப்பாவு, இன்றைய தினத்தையும் அப்படி மாற்றிவிடாதீர்கள் என்று தெரிவித்தார்.