திரௌபதி முர்முவை பாஜக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன? இதுவும் ஒரு அரசியல் சூதாட்டமா?

இந்தியாவின் 16வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 18 அன்று நடக்கவுள்ளது.

 திரௌபதி முர்முவை பாஜக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன? இதுவும் ஒரு அரசியல் சூதாட்டமா?

இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து குடியரசுத் தலைவரை தெர்ந்தெடுக்கவுள்ளனர். ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டனிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்ட அதே நாளில் பாரதிய ஜனதா கட்சி தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபது முர்முவை அறிவித்துள்ளது.

பழங்குடி வேட்பாளர் இஸ்லாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவிக்கப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு 20 நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்துள்ளது. அதில் திரௌபதி முர்முவை பாஜக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜகவின் குறிப்பிட்ட சமூகப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் தான் பாஜகவின் தலைமை பொறுப்புக்கும் அரச பதவிகளுக்கும் வர முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் பாஜக தனது வெற்றி வாய்ப்புக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே அடையாள அரசியலை கையிலெடுத்து வருகிறது.

குஜராத் கலவரமும்…குடியரசுத் தலைவரான அப்துல் கலாமும்!

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான விஷ்வ இந்து பரிசத் நிகழ்விற்காக அயோத்திக்குச் சென்று அகமதாபாத்திர்கு திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு ரெயில் கோத்ரா ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது.

அப்போது 1000க்கும் மேற்பட்டோரால் அந்த ரெயில் தாக்குதலுக்குள்ளனது. இத்தாக்குதலின் போது அடையாளம் தெரியாத நபர்களால் ரெயிலின் நான்கு பெட்டிகளுக்குத் தீ வைக்கப்பட்டது. 57 பேர் இந்த தீ விபத்தில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பஜ்ரங் தள் மற்றும் விஹெச்பி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். எராளமான இஸ்லாமியர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

இதனால் உலகம் முழுவதும் கடும் கண்டனங்களை பாஜக சந்தித்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சியின் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். இஸ்லாமியர்களை பாதுகாக்க தவறிவிட்டதாக வாஜ்பாய் அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. சர்வதேச அரங்கில் இந்தியா தனிமைப்பட்டுப் போகும் சூழல் உருவானது. தாம் இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசு இல்லை என்பதைக் காட்ட பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான் அப்துல் கலாம்.

அப்துல் கலாம் பிறப்பால் தமிழ் இஸ்லாமியராக இருந்தாலும் சித்தாந்தரீதீயாக பாஜகவுடன் ஒத்துப்போகக் கூடியவர். அதனாலேயே பாஜக அவரை தேர்ந்தெடுத்தது.

2017 குடியரசுத் தலைவர் தேர்தல்:-

கடந்த 2017ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 2014-2019 பாஜக ஆட்சியில் தலித் சமூகத்திற்கு எதிராக குறிப்பாக கல்வி நிலையங்களில் தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு அதிகமாக காணப்பட்டது. பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் மரணங்கள் அதிகரித்தது. 

கடந்த 2016ஆம் ஆண்டு ஐதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இவர் அப்பல்கலைகழகத்தின் அம்பேத்கர் மாணவர் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டு வந்தவராவார்.

ரோஹித் வெமுலாவின் மரணத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இது கல்வி நிலையங்களில் சாதிப் பாகுபாடு நிலவுவதை சுட்டிக்காட்டியது. கடந்த பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் தலித் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் பேசுபொருளாக அமைந்தன.

இந்தச் சூழலில் 2017ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜக சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தலிலும் வெற்றி பெற்றார். 

திரௌபதி முர்மு:-

இந்தியாவின் 16வது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வேட்பாளராக பாஜக சார்பில் ஒடிசாவைச் சேர்ந்த திரௌபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரௌபதி முர்மு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டராக இணைந்து 1997ஆம் ஆண்டு ரைரங்பூர் நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். ரைரங்பூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று கடந்த 2000 முதல் 2004 வரை பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் கூட்டணியில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடி அணி துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். தற்போது நீண்டகால பாஜக உறுப்பினர் ஒருவரை பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.