#Exclusive || கடந்த 10 ஆண்டுகளில் இயக்குனர் பாலாவின் இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த இயக்குனர் பாலாவின் கடந்த 10 வருடங்கள் மிகவும் மோசமானதாகவே உள்ளது. அடுத்த படத்தை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன பாலாவின் திரைப் பயணத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தது என்ன? உச்சம் தொட்ட இயக்குனர் தொலைந்து போனது ஏன் எனப் பார்க்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
திரைப்பயணம்:
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் இயக்கம் கற்ற பாலா, 1999 ஆம் ஆண்டு தனது முதல் படம் சேதுவிலேயே தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். சேதுவில் இருந்து 2009 இல் வெளியான நான் கடவுள் வரையான பாலாவின் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன.
சர்ச்சையான பாலா பாணி:
தமிழ் சினிமாவில் பெரிதும் ஒரே போன்ற கதைகளம் கொண்ட படங்களே அதிகம் இருக்கும். அதிலிருந்து தனித்து நின்றவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் ஆகிய நான்கும் பாலாவின் திரை வாழ்வில் முக்கியமான திரைப்படங்கள். இந்தப் படங்கள் கதையின் வலிமையால் பேசப்பட்டவை அல்ல. கதாபாத்திரங்களின் வலிமையே இந்தப் படங்களின் பாராட்டுக்கு உரியவை ஆகின. கதாபாத்திரங்கள் என்று பொதுவாக சொன்னாலும், முக்கியமாக படத்தின் நாயகன் கதாபாத்திரமே இந்தப் படங்களின் மையம். பாலாவின் பிரதான படங்கள அனைத்துமே, படத்தின் நாயகன் சமூகத்தால் புறக்கணிக்கபட்டவர்களாகவே இருப்பர்.
அதே போல் படத்தின் நாயகியும் தமிழ் பண்போடும், கள்ளமில்லாத வெகுளித்தனத்தோடு இருப்பதாகவே இருக்கும். ஆனாலும் பெண்கள் குறித்த பிற்போக்கு தனத்தை பாலா தனது படங்களில் காட்டுவதாக விமர்சனங்களும் எழாமல் இல்லை.
குடும்ப உறவு:
பாலாவின் பெரும்பான்மையான படங்கள் குடும்ப உறவுகள் சுமூகம் இல்லாமலே இருக்கும். தந்தையால் கைவிடப்பட்ட குழந்தையாகவும், தாயின் அன்பு கிடைக்காத ஏக்கம் உள்ள குழந்தையாகவும், விரும்பிய பெண்ணுடன் சேர முடியாத ஒரு முடிவாகவே பாலாவின் திரைப்படங்கள் அமைவதுண்டு.
இதையும் படிக்க: ஜெ.ஜெயலலிதா என்னும் நான்..! மறைந்தும் மறக்காத சரித்திர நாயகியின் நினைவு தினம்..!
விருதுகள்:
பாலாவின் சேது படம், சிறந்த நடிக்கருக்கான இந்திய தேசிய விருது பெற்றது. நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார் பாலா. பாலாவின் குருவும், மறைந்த இயக்குநருமான பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த பத்து உலக சினிமாக்களில் ஒன்றாக பிதாமகனை குறிப்பிட்டுள்ளார். பாலா படவிழாவில் கலந்து கொண்ட மணிரத்னம், 'நான் இங்கு விருந்தினராக வரவில்லை, பாலாவின் ரசிகனாக வந்திருக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
கடைசி திரைப்படம்:
பாலா இயக்கிய கடைசித் திரைப்படம் ’வர்மா’ திரைக்கே வரவில்லை. தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான இது, அந்த படத்தின் எந்தச் சாயலையும் கொண்டிருக்கவில்லை எனக் கூறி, படத்தின் தயாரிப்பாளர்கள் வர்மா படத்தை வெளியிடவில்லை. வேறு இயக்குனரை வைத்து அதே கதையை இயக்கி ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியிட்டனர். இந்திய திரை வரலாற்றிலேயே இது மாதிரி ஒரு நிகழ்வு எந்த ஒரு இயக்குனருக்கும் நடந்ததில்லை. பாலா மாதிரியான ஒரு சிறந்த இயக்கினருக்கு இது ஒரு துரதிருஷ்டமே.
கடந்த 10 ஆண்டுகள்:
பாலாவின் பெயர் சொல்லும் கடைசிப் படமாக அமைந்தது 2013 இல் வெளியான பரதேசி தான். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு வெளியான தாரை தப்பட்டை பாலா படங்களில் மிக அதிக ஏமாற்றத்தை கொடுத்த படமாக அமைந்தது. அதன் பின்னர் 2018 இல் பாலா இயக்கத்தில் வெளியான படம் நாச்சியார். அது பாலாவின் ஆளுமை முழுமையாக வெளிப்பட்ட திரைப்படமாக அமையவில்லை. அது வெளியாகி 4 வருடங்களுக்கு மேலாகிறது. கிட்டதட்ட 10 வருடங்களாக அவருக்கு எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை.
தயாரிப்பாளராக பாலா:
இயக்குனராக மட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் பாலாவின் சினிமா சரிவையே சந்தித்து வருகிறது. பி ஸ்டியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக மாயாவி, பரதேசி, பிசாசு, சண்டி வீரன், நாச்சியார், விசித்திரன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் பாலா. அதுவும் அருக்கு கை கொடுக்கவில்லை.
சர்ச்சைகளும், பிரச்சனைகளும்:
அஜித் - பாலா:
பாலா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த படம் நான் கடவுள். ஆனால், இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்பதம் செய்யபட்டது அஜித் தான். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே அஜித்துக்கும் பாலாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சை ஏற்பட்டதன் காரணமாக படத்தில் இருந்து விலகினார் அஜித். அப்போது பாலா அஜித்தை அடித்ததாகக் கூட சில வதந்திகள் பரவியது.
பாரதிராஜா - பாலா:
பெரும்பாலான படங்கள் தயாரான பிறகோ அல்லது வெளியாக இருக்கும் முதல் வாரமோதான் சர்ச்சையில் சிக்கி விமர்சகர்களின் வாய்க்கு அவல் போடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட ஜாதியின் பழைய வரலாறாரான ‘குற்றப்பரம்பரை’ என்னும் கதையை படமாக்குவதில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட மோதல் தமிழ் திரையுலகையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. மேலும் இந்த கதைக்கு எழுத்தாளர்கள் ரத்னகுமார், வேல ராமமூர்த்தி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடினர். இந்த படத்திற்கு பாரதிராஜா ஒரு புறம் பூஜையோடு ஆரம்பிக்க மறு புறம் பாலா படத்திற்கான வேலைகளை தொடங்கி இருந்தார். ஆனால் இருவரும் அடுத்த கட்டதிற்கு செல்லவில்லை.
வி.ஏ. துரை - பாலா:
விக்ரம் - சூர்யா உள்ளிடோர் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தை பாலா இயக்க, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் சார்பில் பி.ஏ.துரை என்பவர் அதை தயாரித்திருந்தார். பிதாமகன் வெளியாகி விமர்சன ரீதியில் வெற்றி பெற்றாலும், வசூல் ரீதியில் படத்தின் செலவை விட குறைவாகவே வந்ததால், அதை ஈடுசெய்ய தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு 25 லட்ச ரூபாய் முன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றவில்லை. இந்த நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக் கொடுக்குமாறு தயாரிப்பாளர் வி.ஏ.துரை, இயக்குநர் பாலா அலுவலகத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இந்த விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது.
வணங்கான்:
நடிகர் சூர்யாவுடன் இணைந்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். இடையில் பல சர்ச்சைகளுக்கும் ஆளானார் பாலா. வணங்கான் படம் கைவிடப்பட்டதகாவும் சொல்லப்பட்டது. ஆனால் அவை அத்தனையும் தகர்த்து வணங்கான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. பட வேலைகளும் தொடங்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த படம் பாலாவிற்கு இழந்த இடத்தை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கைவிட்ட வணாங்கான்:
வணங்கான் படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார் சூர்யா. என் மீதும், இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கதாபாத்திரங்கள் மீதான ஆளுமை, காட்சிகளை செதுக்குகிற நேர்த்தி, வசனங்களை குறைத்து நறுக்கென வெளிப்படும் உணர்வுகள் என பாலாவின் நேர்மறை அம்சங்கள் அதிகம் இருந்தாலும், அவர் மீதான எதிர்மறை கருத்துகளும் அதிகமாகவே உள்ளது. மீண்டும் மக்கள் மனம் விரும்பும்படியான ஒரு படைப்பை பாலா கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பிற்கு காலமே பதில்..