டிராவிட் பிறந்தநாளான இன்று தொடங்கும் மூன்றாவது போட்டி...வெற்றி பெற்று ராகுலுக்கு பிறந்தநாள் பரிசளிக்குமா இந்திய அணி?

சச்சின், கங்குலி எனும் இரண்டு பிரம்மாண்டங்களுக்கு இடையே ஜொலித்தவர் ராகுல்...

டிராவிட் பிறந்தநாளான இன்று தொடங்கும் மூன்றாவது போட்டி...வெற்றி பெற்று ராகுலுக்கு பிறந்தநாள் பரிசளிக்குமா இந்திய அணி?

இந்திய அணியின் பெருஞ்சுவர் என அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

உலக மக்களுக்கு சீனப் பெருஞ்சுவரைத் தெரியாமல் இருக்காது... ஆனால் இந்தியப் பெருஞ்சுவரைத் தெரியுமா? அவர்தான், இந்திய கிரிக்கெட்  அணியின், முன்னாள் வீரர் ராகுல் டிராவிட். 90-களின் இறுதியில், இந்திய அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் பெருஞ்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட். 

வெளிநாட்டில் பங்கேற்ற போட்டிகளில் இந்திய அணி திணறும் போதெல்லாம் நின்று, நிதானமாக விளையாடி இந்திய அணியை காப்பாற்றியவர் டிராவிட். அதனால்தான் அவரை இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என அழைத்தனர். 

1973ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பிறந்த ராகுல் டிராவிட், 1996ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி சர்வதேச இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அன்று தொடங்கிய அவரது ஆட்டம் 2012ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றது. இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி எனும் இரண்டு பிரம்மாண்டங்களுக்கு இடையே நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலித்தவர் தான் ராகுல் டிராவிட்.

தனது கிரிக்கெட் வரலாற்றில், ராகுல் டிராவிட், மொத்தமாக விளையாடிய டெஸ்ட்  போட்டிகள் 164. அதில் 13280 ரன்களை அவர் குவித்துள்ளார். ஐந்து முறை இரட்டை சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 270 ரன்களை அவர் எடுத்துள்ளார். 2011 ஆம்  ஆண்டு, இங்கிலாந்திற்க்கு  எதிராக அவர் விளையாடிய போட்டியே அவரது கடைசி ஒரு நாள் போட்டி. அதில் 69 ரன்கள் எடுத்தார். 
 
ஐபிஎல்  துவங்கப்பட்ட போது பெங்களூர் அணிக்காக  விளையாடிய டிராவிட் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடத் துவங்கினார். அதனை தொடர்ந்து டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணியை முதல் போட்டியில் செஞ்சுரியனில் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணி, டிராவிட் பிறந்தநாளான இன்று தொடங்கும் மூன்றாவது போட்டியிலும் அவரின் நுணுக்கத்தை கொண்டு வெற்றிபெறும் பட்சத்தில், வரலாற்று சாதனை படைக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை...