காதலில் பெற்றோரை மறந்த இளம் ஜோடி..! நடு ரோட்டில் படுத்து புரண்ட பெற்றோர்..!

பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு..!

காதலில் பெற்றோரை மறந்த இளம் ஜோடி..! நடு ரோட்டில் படுத்து புரண்ட பெற்றோர்..!

காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.. என பாடும் காதலர்களை பார்ப்பதா? அல்லது அந்த தேர்வுக்கு உன்னை அனுப்பி வைத்தது நாங்கள் தாண்டா என கையில் கம்புடன் நிற்கும் பெற்றோரை பார்ப்பதா? இருவரையும் ஒரே தராசில் வைப்பது தான் சரி என தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் காதல் கண்ணை மட்டுமல்ல மனசாட்சியையும் மறைத்து விடுகிறது எனத் தோன்றுகிறது. இதற்கு உதாரணமாக ராசிபுரத்தில் நடந்த சம்பவத்தை கூறலாம்.. 

பலரும் காதல் வந்தவுடன் பெற்றவர்களை அடியோடு மறந்து விடுகிறார்கள். அவர்கள் உடனே தங்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்து உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணுகிறது இன்றைய இளைய சமுதாயம். அது சாத்தியமா? சுற்றம், சூழலும் என்ன சொல்லும், உறவுக்காரர்களிடம் என்ன சொல்வது? காதலர்கள் விவரம் அறிந்தவர்களா? சேர்த்து வைத்தால் நிம்மதியாக வாழ்க்கை நடத்துவார்களா? என 1000 விஷயங்களை சிந்திக்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால் இதனை யோசிக்க மறுக்கிறது இன்றைய இளைய சமுதாயம். 

இந்தக் காலகட்டத்தில் காதல் என்பது பள்ளிக்கூடம் செல்லும் வயதிலேயே முளைத்து விடுகிறது. 16 வயது பெண்ணிற்கு காதல் என்றால் என்ன தெரியும்? என்ன புரியும்? நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தாண்டாகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பவதாரணி. இவரும் அதேப் பகுதியை சேர்ந்த மணி என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். வழக்கம் போல இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.  எதிர்ப்புக்கான காரணமும் புதிதி இல்லை ஒன்று வெவ்வேறு சமூகங்கள், இன்னொன்று பவதாரணிக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால். 18 வயதிலேயே 3 வருட காதல் என்றால் அவர் கிட்டத்தட்ட 15 வயதில் காதலில் விழுந்துள்ளார். 

10-வது படிக்கும் பெண் காதலில் இருந்தால் எந்த பெற்றோர் ஏற்றுக்கொள்ள நினைப்பார்கள். ஆனால் இந்த இளம் காதலர்கள், திருமணத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள வயது வரம்பு வந்ததும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதுடன், பாதுகாப்பு கோரி நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். என்ன தான் சட்டத்தை நாம் மதிக்க வேண்டும் என்றாலும் கூட, இந்தக் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து படித்து, வேலை சென்று வாழ்க்கையின் இண்டு இடுக்குகளை ஓரளவு கற்றப் பிறகு திருமண வாழ்க்கைக்குள் சென்றால் தானே அது நிம்மதியாகவும், திருப்தியாகவும் இருக்கும். அப்படி எதுவுமே தெரியாமல் இருவரும் வயது வந்து விட்டது என்று உடனே திருமணம் செய்துக் கொண்டிருக்கின்றனர். 

பெத்த மனம் எப்படி ஒத்துக்கொள்ளும். சட்டத்தை மீறி ஒன்றும் கூற முடியாதே? காவல்துறையினரும், இருவரையும் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீதிபதி இருவரிடமும் விசாரணை செய்து, இருவரும் மேஜர் என்பதால், இந்த திருமணம் செல்லும் என அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த இளம் ஜோடிகளை, காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு கொண்டு சென்று விட முற்பட்டனர். அப்போது அங்கிருந்த பவதாரணியின் பெற்றோர் நட்ட நடு சாலையில் அழுது புரண்டு, பவதாரணியை கூட்டி சென்ற வாகனத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டியின் முன்புறமுள்ள பம்பரை கட்டிப்பிடித்து பவதாரணியின் தந்தை அழுது புரண்டது காண்போரை கண்கலங்க வைத்தது. 

அதன் பிறகு இளம் ஜோடியை வேறு வாகனம் மூலம் அனுப்பி வைத்த போலீசார் பெற்றோரையும் அனுப்பி வைத்தனர். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழிக்கேற்க நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம். காதல் தவறான ஒன்று கிடையாது, சரியான வயதில், பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்ட பிறகு காதலில் விழுவது இளைஞர்களுக்கு நல்லது. பெற்றோர்களும் அதனை எடுத்ததுமே தடுத்து நிறுத்தாது பிள்ளைகளுக்கு எடுத்து புரிய வைத்து அவர்களை ஒரு நிலைமைக்கு கொண்டு வந்து பிறகும் காதல் நிலைத்ததேயானால் அதனை சாதிபாகுபாடின்றி ஏற்றுக் கொள்வது இன்னும் நல்லது.