வருமானத்தை பெருக்காமால், ஊதாரித்தனமாக செலவு செய்த அதிமுக..! தோலுரித்த பிடிஆர்..!

ஒரு ஒரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63லட்சம் கடன்..!

வருமானத்தை பெருக்காமால், ஊதாரித்தனமாக செலவு செய்த அதிமுக..! தோலுரித்த பிடிஆர்..!

20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில் என்ன என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்பதற்கு முன்பு, வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது பற்றி பார்ப்போம். வெள்ளை அறிக்கை என்பது, ஒரு அரசாங்கமோ அல்லது ஒரு அமைப்போ ஒரு பிரச்சனைக்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் இந்த வெள்ளை அறிக்கை. வெள்ளை அறிக்கை மூலம் வெளியிட்ட அமைப்பின் தெளிவான குறிக்கோளை மக்கள் அறிந்துகொண்டு, விவாதிக்கவோ, ஆலோசிக்கவோ முடியும்.

தமிழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் என்பது வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே இருந்து வந்தது. உங்கள் ஆட்சியில் இருந்த போது கொடுத்த திட்டங்களை வெள்ளை அறிக்கையாக சமர்ப்பிக்க முடியுமா என ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் அவ்வப்போது பேசியதை கேட்டிருப்போம். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த அதிமுக ஆட்சியின் போது இருந்த நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய அவரது செய்தியாளர் சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவால் முதலமைச்சர ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு ஆரம்பத்தில் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் இவரது ஆட்சி 3 மாதத்தில் கலைந்து விடும், ஒரு வருடத்தில் கலைந்து விடும் என கூறி வந்த நிலையில், 4 வருடங்கள் வெற்றிகரமாக முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சியின் போது கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், அதனையும் மிக சாதுர்யமாக கட்டுப்படுத்தினார். 

இப்படி அவர் மீது பெரிய நன்மதிப்பு பெற்ற நிலையில், அது அனைத்தும் பொய், அதிமுக மக்களுக்கு அது செய்கிறோம், இது செய்கிறோம் எனக் கூறி முட்டாள் ஆக்கி விட்டதாகவும், ஏமாற்றி விட்டதாகவும், கடனாளி ஆக்கி விட்டதாகவும் கூறியுள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். என்னது கடனாளியா? என ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் ஒரு ஒரு குடும்பத்தினர் மீது ரூ.2.63 லட்சம் கடனிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பள்ளத்தில் தள்ளவில்லை, ஏற்கனவே சரிந்துள்ளதால் தான் சரிவு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். 

ஒவ்வொரு குடும்பத்தின் மேலும், சுமார் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தா  கடன் இருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 5 வருடத்தில் எடுத்த பொது கடன் ரூ.3 லட்சம் கோடி எனவும், அதில் 50% வருவாய் பற்றாக்குறைக்கு, தின செலவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், வேறு எந்த மாநிலமும் இந்த அளவிற்கு சரிவை சந்திக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது என்றார். 

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளதாகவும், கலைஞர் ஆட்சியில் அதிகரித்திருந்த உற்பத்தி மற்றும் வருமானம், தற்போது பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20ஆயிரம் கோடி ஜிஎஸ்டி  நிலுவை தொகை வரவில்லை எனவும், மானியம் வழங்கியதில் உரிய முழுமையான விபரம் இல்லை எனவும்  குற்றம் சாட்டியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள்  1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாகவும், தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். 1200 கோடி ரூபாய் மின்வாரியம் மாநகராட்சிகளுக்கு செலுத்தாமல் உள்ளதாகவும், போக்குவரத்துத் துறையில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 59 ரூபாய் இயக்குவதற்கான செலவில் நஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறதாக தெரிவித்துள்ள அவர், போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால்  மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். 

உலக பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழகம் அதிகம் பாதிக்கப்படும், இதுதான் தற்போதய நிலை எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தவறு, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளதாகவும், நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதைக் கூட கூற முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை திசைத்திருப்ப இந்த அறிக்கை இல்லை என திட்டவட்டமாக கூறிய அமைச்சர், 100% முதலீடு செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மதிக்காமல், கடந்த அதிமுக அரசு 50% மட்டுமே முதலீடு செய்திருப்பதாகவும், அதனை அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். 

கடனை வாங்கி முதலீடுகளுக்கு செலவு செய்யாமல் அரசாங்கத்தை நடத்துவதற்கே கடன் வாங்கி வந்திருக்கிறது அதிமுக அரசு என குற்றம்சாட்டியுள்ள அவர், கணிசமாக வரியை வசூலிக்க வேண்டிய பெருந்தலைகளிடமிருந்து கூட வரி வசூலிக்கப்படவில்லை என சாடியுள்ளார். நிர்வாக கோளாறுகளை சரி செய்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்ற அமைச்சர், இதற்கு கணிசமான அவகாசம் தேவைப்படும் என்றார். தமிழகத்தில் ரேஷன் அட்டைக்கு வழங்கப்பட்ட ரூ.4,000-த்தை வருமான வரி செலுத்துவோர் மற்றும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை இதிலிருந்து விலக்கு அளித்து விநியோகித்து இருந்தால் பல நூறு கோடி ரூபாய் மிச்சம் ஆகி இருக்கும் எனக் கூறினார். ஆகமொத்தத்தில் தமிழகத்தில் மக்களுக்கு கசப்பு மருந்து காத்திருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை எனவும், இந்த கசப்பு மருந்து யாருக்கு எந்த விகிதத்தில் கொடுக்கப்படும் என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறியிருக்கிறார். 

எந்த அரசாங்கமும் செலவை அதிரடியாக குறைக்கவோ, எல்லா தவறையும் ஒரே நாளில் திருத்தவோ முடியாது என்ற அமைச்சர், பேரிடர் காலத்தில் முக்கியத்தை அறிந்து செயல்பட வேண்டும் எனவும், எவ்வளவு விரைவாக தகவல்களை உருவாக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செய்வோம் என உறுதியளித்தார். இது மேலோட்டமாக வெள்ளை அறிக்கை எனக் கூறிய அமைச்சர் பழன்வேல் தியாகராஜன், வரும் காலங்களில் துறை ரீதியிலான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார். வரி விலக்கு அளித்து தான் முதலீடுகள் ஈர்க்க வேண்டும் என்பது தவறான கருத்து எனவும் அமைச்சர் கூறியுள்ளார். ஆக கடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலையை மோசமாக்கியுள்ள நிலையில், ஒரு ஒரு குடும்பத்தினரையும் கடனளியாக்கியும் சென்றுள்ளது என்பது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலம் நிரூபனமாகியுள்ளது. இந்த வெள்ளை அறிக்கைக்கு அதிமுவின் பதில் என்ன என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!