மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறிவந்த நிலையில், தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தவே அப்படி கூறினோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
காவல்துறை மீது அண்ணாமலை குற்றச்சாட்டு:
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கருத்து கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த விபத்து வெறும் சிலிண்டர் விபத்து இல்லை; இது தற்கொலைப்படை தாக்குதல் என்று பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். அதுமட்டுமில்லாமல், இந்த சம்பவத்தில் உள்துறை செயலிழந்துவிட்டது என்றும், காவல்துறை சரியாக செயல்பட வில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
காவல்துறை வெளியிட்ட செய்திகுறிப்பு:
கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் கருத்து அபத்தமானது என்றும், காவல்துறை விசாரணை செய்வதற்கு முன்பே பல கருத்துகளை அண்ணாமலை எப்படி கூறலாம் என்று குறிப்பிட்டு தமிழக காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது.
10 பக்கங்கள் கொண்ட அறிக்கை:
இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று 10 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழக அரசின் மீதும், தமிழக காவல் துறையின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
கோவை 20 வருடம் பின்நோக்கி சென்றிருக்கும்:
இந்நிலையில் இன்று கோவை கார் வெடி விபத்து நடந்த சங்கமேஸ்வரர் கோயில் அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை சம்பத்தில் சிறப்பாக செயல்பட்ட தமிழக காவல் துறையை பாராட்டி பேசினார். தொடர்ந்து, கோவை தற்கொலைப்படைதாக்குதல் சரியாக நடந்திருந்தால் கோவை 20 வருடம் பின்நோக்கி சென்றிருக்கும் என்று கூறினார். அதேபோன்று, இந்த சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை; எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது என்பதையும் தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தவே கூறினோம்:
கோவை கார் விபத்து சம்பவத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று கூறியதாகவும், மக்களை எச்சரிக்கைப் படுத்துவது காவல்துறையின் தலையாய பணி என்றும் அண்ணாமலை தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், இந்த விஷயத்தில் மாநில அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் பாஜக கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவை கார் விபத்து தற்கொலைப்படை தாக்குதல் என கூறும் நிலையில், இன்னும் கார் வெடி விபத்து எனக்கூறி வருவதும் எந்த விதத்தில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்,
முன்னதாக, தமிழக காவல் துறையை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை தற்போது, தமிழக காவல் துறை கோவை சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கூறி பாராட்டினார். அதேபோன்று, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று கூறியதாகவும் தற்போது அண்ணாமலை குறிப்பிட்டிருப்பது அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் குழப்பத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தி வருகிறது.