என்னது பாஜக எதிர்க்கட்சியா? அப்போ அதிமுக? அதிர வைத்த அண்ணாமலை..!

திமுகவை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை..!

என்னது பாஜக எதிர்க்கட்சியா? அப்போ அதிமுக? அதிர வைத்த அண்ணாமலை..!

பாஜக எதிர்க்கட்சி தானே தவிர எதிரி கட்சியல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது மக்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவினரின் மனதை குண்டு வைத்து தகர்த்தது போல இருந்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்போ ஏன் இதை போய் பெரிய விஷயம் ஆக்குறீங்க? என நினைக்கத் தோன்றுபவர்களுக்கு, அட தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர்க்கட்சி என்பதை நினைவூட்ட கடமைபட்டிருக்கிறோம். 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களை கைப்பற்றியது. தற்போதைய மாநில தலைவரான அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 66 இடங்களை கைப்பற்றி ஆஸ்தான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் இருந்து வருகின்றனர். 

ஏற்கனவே தமிழ்நாட்டில் திமுக-பாஜகவிற்கு இடையே தான் போட்டி எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அதனை நிரூபணமாக்கும் வகையில் உள்ளது அண்ணாமலையின் சமீபத்திய பேட்டி. சமீபத்தில் பிரதமர் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய இணை அமைச்சராக அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பதவியேற்றுக் கொண்ட நிலையில், அடுத்த தலைவராக அண்ணாமலை ஐ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை பல சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது பேசி வருகிறார்.

அந்த வகையில், கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "தமிழகத்தில் வருகின்ற 17, 18,19 ம் தேதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும் மக்கள் ஆசிர்வாத் யாத்திரை நடைபெறுவதாக தெரிவித்தார். கோவையில் ஆரம்பிக்கும் இந்த யாத்திரையில் மக்களின் ஆசிர்வாதங்களை பெறும் எல்.முருகன் பிறகு சொந்த ஊரில் தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க இருப்பதாக தெரிவித்தார். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் உள் அரங்கு நிகழ்ச்சிகள் நடத்தாமல் வெளி அரங்கு நிகழ்ச்சிகள் நடத்துவதாக தெரிவித்த அவர், கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பின்னர் எல்.முருகனின் மக்கள் சந்திப்புகள் இருக்கும் என்றார். என்னடா இன்னும் நமக்கு உண்டான பாயிண்ட் எதுமே வரலையே என ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 

100 நாட்களை நிறைவடந்துள்ள திமுக அரசு, நேர்மையான அதிகாரிகளை பதவிகளுக்கு கொண்டு வந்திருப்பதாகவும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தி உள்ளதாகவும் புகழாரம் சூட்டினார். முதல் 30 நாளில் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறிய அமைச்சர்களிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த அவர், பாஜக எதிர்க்கட்சி தான், எதிரிகட்சி கிடையாது என ஒரு குண்டை தூக்கிப் போட்டார். திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த நொடியே அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, மக்களை ஏமாற்றுகிறது திமுக, என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர் அதிமுக. 

எதிர்க்கட்சி என்றால் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யும் விதமாக, பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்  முன்னரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை விட்டு வெளியே வந்தனர் அதிமுக. இப்படி இருக்க திமுகவினரை புகழ்ந்தது மட்டுமின்றி, பாஜக எதிர்க்கட்சி என கூறியது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. என்ன தான் தங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவை அதிமுகவினர் நம்பி இருப்பது உண்மை என்றாலும், பொது வெளியில் இப்படி அப்பட்டமாக 4 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜக எதிர்க்கட்சி என அதன் மாநிலத் தலைவரே கூறுவது எந்த விதத்தில் சரியானதாக இருக்குமென அரசியல் விமர்சகர்கள் சலசலத்து வருகின்றனர். 

மேலும் தமிழக எம்.பி.க்கள் உள்ளூரில் தான் புலியாக இருப்பதாகவும், பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை என குற்றம்சாட்டிய அண்ணாமலை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம் எனக் கூறியதும் ஒரு விதத்தில் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியிருக்கிறது. இந்துக்கள் தான் பெரியவர்கள், பிராமனர்கள் தான் அர்ச்சனை செய்ய வேண்டும், கடவுளுக்கு நிகரானவர்கள் என்றெல்லாம் பேசுபவர்களை கட்சியில் வைத்துக் கொண்டு, அனைவரும் வர வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என அண்ணாமலை கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக வேறு, பாஜக வேறு, கருத்து வேறுபாடு இருந்தாலும், கொள்கைகளுக்காக ஒன்றாக இருக்கிறோம் எனக் கூறிய அவர், சுதந்திர தினத்தன்று கோவையில் பொது இடங்களில் தேசியக் கொடி ஏற்ற தடை விதித்துள்ளனர். டாஸ்மாக் கடையில் நிற்பதால் வராத கொரோனா, தேசியக் கோடி ஏற்றுவதால் வந்து விடுமா?" என்ற அறிவுப்பூர்வமான கேள்வியையும் எழுப்பினார். இவர் அதிமுகவிற்கு மட்டும் தான் ஆப்பு வைக்கிறாரா? அல்லது தன்னுடைய கட்சிக்குமே ஆப்பு வைக்கிறாரா என்பது போக போகத் தான் தெரியவரும்.