வானதியின் வாய்ப்பை தட்டிப் பறித்த அண்ணாமலை..! தமிழக பாஜகவினர் தலைமை மீது அதிருப்தி..!

வானதியின் வாய்ப்பை தட்டிப் பறித்த அண்ணாமலை..!

வானதியின் வாய்ப்பை தட்டிப் பறித்த அண்ணாமலை..! தமிழக பாஜகவினர் தலைமை மீது அதிருப்தி..!
பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவை விரிவடைந்த சமாச்சாரத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் தற்போது சல சலப்பது தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது தான்..
 
தமிழக பாஜகவில் நிறைய சீனியர்கள் இருந்தும், கட்சிக்காக நீண்ட காலம் உழைத்தவர்களும் இருக்கும் நிலையில், கட்சியில் சேர்ந்து ஒரு வருடத்திலேயே துணை தலைவராகி பிறகு தலைவரானார் அண்ணாமலை. தமிழிசை சௌந்தராஜன் தெலங்கானா ஆளுநராக சென்ற போதே தலைமை பதவிக்கு நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்.முருகனுக்கு பதவி கிடைத்தது. 
 
இதனை பொறுத்துக் கொண்ட சீனியர்கள், தேர்தலில் தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டலாம் என சுழன்று சுழன்று பிரசாரம் மேற்கொண்டு தேர்தலை சந்தித்தனர். அதிமுகவுடன் கூட்டணி வைத்து 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு பாஜகவில் இருந்து தமிழக சட்டசபைக்குள் 4 உறுப்பினர்கள் நுழைந்தது எல்.முருகன் தலைமையில் தான். 

 
இதனையடுத்து பிரதமர் மோடி அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யவிருப்பதாக வந்த தகவலை அடுத்து டெல்லியில் முகாமிட்டார் எல்.முருகன். தமிழகத்தில் பாஜகவிற்கு முதற்கட்ட வெற்றி கிடைத்ததன் விளைவாக எல்.முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றிடமான பாஜக தலைமையிடத்திற்கு யார் வருவார் என பட்டியல் எடுக்கும் போது, தேர்தலில் வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன்  என சீனியர்களின் பெயர்கள் இடம் பெற்றன. 

பாஜகவை பொருத்தவரை ஒருவர் இரு பதவிகளில் இருப்பதை கட்சி தலைமை ஏற்றுக் கொள்வது இல்லை. அந்த வகையில் பார்க்கும் போது நயினார் நாகேந்திரனின் தலை அவுட்.. இருப்பினும் தேர்தலில் வெற்றி பெற்ற வானதி சீனிவாசன் வெயிட்டிங் லிஸ்ட்டில் வைக்கப்பட்டார். காரணம் தமிழக அரசியலை நன்கு அறிந்தவர், வழக்கறிஞர் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர் என அவருக்கான நற்பெயர் அதிகம். தமிழக அரசியலில் கட்சி தலைமைப் பொறுப்பில் பெண்கள் இல்லாத சூழலில் வானதி பெயர் பலமாக பரிசீலிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அரசியல் விமசகர்கள் கூறி வந்தது போல் அண்ணாமலை ஐபிஎஸ்-க்கே அடித்தது யோகம்..

ஏற்கனவே கர்நாடகாவில் காவல்துறையில் பணியாற்றியவர். இளைஞர். சுறுசுறுப்பானவர். இப்போதைய சூழலை எளிதில் கையாளும் திறன் படைத்தவர் என பாஜக தலைமை இவரை புகழந்து தள்ளினாலும், தமிழக பாஜக சீனியர் நிர்வாகிகளுக்கு தலைமை மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது என்பதே நிதர்சனம்..