காதலியை கண்டித்ததால் முன்னாள் காதலனின் மூக்கை வெட்டிய தற்போதைய காதலன் …. கேட்டாலே தலையை சுற்றும் முன்கதை…  

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவிருந்த வில்வித்தை வீரரின் மூக்கு மற்றும் வாய் பகுதியை சரமாரியாக  வெட்டிய நபரை  கைது செய்துள்ளனர். எதற்காக இந்த சம்பவம் என  செய்தி தொகுப்பில் காண்போம்…  

காதலியை கண்டித்ததால் முன்னாள் காதலனின் மூக்கை வெட்டிய தற்போதைய காதலன் …. கேட்டாலே தலையை சுற்றும் முன்கதை…   

சென்னை ஆழ்வார்பேட்டையை பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 21). பொறியியல் பட்டதாரியான இவர் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார் . ஐ.சி.எஃப் வடக்கு காலனியில் உள்ள தயான்சந்த் வில்வித்தை பயிற்சி மையத்தில் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி பயிற்சி மையம் திறக்கப்பட்டதை தொடர்ந்து தனது பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார்.

பயிற்சி முடித்து மதியம் ஒரு மணி அளவில் வீட்டுக்கு கிளம்பும்போது பயிற்சி மையத்திற்கு அருகே ராயல் என்ஃபீல்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், "தனது தந்தைக்கு போன் செய்ய வேண்டும்" எனக்கூறி ஆதித்யாவிடம் செல்போன் வாங்கி பேசிக்கொண்டிருந்தார். அப்பொழுது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆதித்யாவின் மூக்கு மற்றும் வாய் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ஆதித்யாவின் மூக்கு மற்றும் மேல் தாடைப் பகுதி முற்றிலுமாக துண்டாகி விழுந்துள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வந்த ஐ.சி.எஃப் போலீசாரால் கடந்த இரண்டு மாதங்களாக குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை. மேலும், விசாரணையையும் துரிதப்படுத்தாமல் கிடப்பில் போட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் கொரட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொரட்டூர் போலீசாரின் விசாரணையில் 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனடிப்படையில் கொரட்டூர் போலீசார் நேற்று முன்தினம் புருஷோத்தமனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது தான், ஐ.சி.எஃப்-ல் ஜூன் 26 ம் தேதி வில்வித்தை வீரரான ஆதித்யாவின் மூக்கு மற்றும் வாய் பகுதியை வெட்டிய மர்ம நபர் இவர்தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கொரட்டூர் போலீசார் ஐ.சி.எஃப் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில் ஐ.சி.எஃப் போலீசார் புருஷோத்தமனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஐ.சி.எஃப் வடக்கு காலனியில் உள்ள தயான்சந்த் வில்வித்தை பயிற்சியில் வில்வித்தை பயின்று வருகிறார் என்பதும், அங்கு வில்வித்தை பயிற்சியில் ஈடுபடும் போது சிறுமிக்கும் ஆதித்யாவுக்குமிடையே காதல் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பின்னர் இருவருக்குமிடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து நிலையில், அந்த சிறுமியும் அவர் குடியிருக்கும் அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரும் காதலித்து வந்ததுள்ளார்கள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்களின் காதலை அறிந்த சிறுமியின் முன்னாள் காதலரும் வில்வித்தை வீரருமான ஆதித்யா சிறுமியை கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், புருஷோத்தமன் ஆதித்யா மீது கோபம் கொண்டு அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து புருஷோத்தமன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஐ.சி.எஃப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்று காதலுக்காக கொலை  வெறி தாக்குதலை இளைஞர்கள் கத்தியை கையில் எடுப்பதன் மூலம் அவர்களுடைய எதிர்காலம் மட்டும் பாதிப்பது மட்டுமின்றி பெற்றோர்களும் பாதிப்படைகிறார்கள். இளைஞர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றாலும் விளையாட்டிலோ அல்லது உடற்பயிற்சியிலோ கவனத்தை செலுத்தினால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.