இவரா மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்?

இவரா மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர்?

மகாராஷ்டிரா முதலமைச்சராக உள்ள சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே ரா ஜினாமா செய்துள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று ஆளுநரைச் சந்தித்து முதலமைச்சராக பதவியேற்க உரிமை கோரவுள்ளதாக கூறப்படுகிறது.

சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பினார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் உடனடியாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடனான கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். சிவசேனாவைச் சேர்ந்த 55 எம்.எல்.ஏக்களில் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிக்கவே உத்தவ் தாக்கரே செய்வதறியாது திண்டாடினார். தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சமூக வலைதளங்கள் வாயிலாக பல முறை உருக்கமாக உரை நிகழ்த்தினார். ஆனால் எதுவும் பலனளிக்காமல் போகவே கடந்த ஜூன் 29 அன்று இரவு முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்தச் சூழலில் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தமுள்ள 288 இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. ஷிண்டே தலைமையில் 39 சிவசேனா எம்.எல்.ஏக்களும் பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 11 பேர் என 50 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இவர்கள் பா. ஜ.கவுக்கு ஆதரவளித்தால் அதன் எண்ணிக்கை 150க்கும் மேல் செல்லும். ஆட்சியமைக்க 145 சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை போதுமானது என்ற நிலையில் அதற்கும் மேலாகவே பா. ஜ.கவுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பா ஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி மகாராஷ்டிராவில் நடைபெற்றது. தேவேந்திர பட்னாவிஸ் அப்போது முதலமைச்சராக பதவி வகித்தார். மாணவப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி யில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

இதன் தொடர்ச்சியாக 1989 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் வார்டு தலைவராக நியமிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு நாக்பூர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் 1992 ஆம் ஆண்டு நாக்பூர் பாரதிய ஜனதா இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். 

 1992 ஆம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸ் தனது 22 வயதில் நாக்பூர் மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1994 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில பாரதிய ஜனதா இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

1997 ஆம் ஆண்டு மிக இளவயதிலேயே நாக்பூர் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு முதன் முறையாக மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியின் அனைத்திந்தியத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு மகாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிர பாரதிய ஜனதா கட்சியின் தலைவரானார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா-பா ஜக கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து முதலமைச்சராக தேர்வானார்.

2019 ஆம் ஆண்டு சிவசேனா-பா ஜக வெற்றி பெற்றாலும் கூட்டணியில் ஏற்பட்ட பிரச்சினையால் சிவசேனா விலகவே பா ஜக எதிர்க்கட்சியானது. தேவேந்திர பட்னாவிஸ் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்தார்.

இவர் தொடர்ச்சியாக ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

மகாராஷ்டிராவில் எப்போது வேண்டுமானாலும் பா. ஜ.க ஆட்சி அமையலாம் என்னும் சூழல் நிலவுகிறது. ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சர் ஆவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

- ஜோஸ்