அமமுகவுக்கு நோ.. பாஜவிற்கு யெஸ்ஸா? காங். பொதுச் செயலாளர் கண்டனம்..!

தமிழ்நாட்டில் பாஜக வளர ஆதரிக்கிறதா திமுக?

அமமுகவுக்கு நோ.. பாஜவிற்கு யெஸ்ஸா? காங். பொதுச் செயலாளர் கண்டனம்..!

மேகதாது அணை திட்டம் குறித்த அறிவிப்பை கர்நாடக அரசு தொடங்கிய காலம் முதல் பல வருடங்களாக இன்றும் இது தொடர்பாக சுமூக முடிவு எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கென தனிக் குழு அமைக்கப்பட்ட போதிலும், கர்நாடக ஒரு பக்கம் நிச்சயம் மேகதாது அணை கட்டப்படும் எனவும், அதற்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என தமிழ்நாடும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திக் கொண்டே இருக்கின்றன. ஆட்சிகள் மாறினாலும், இதற்கான போராட்டம் மட்டும் குறைந்த பாடில்லை. 

மத்தியில் பாஜக இருந்தாலும், தமிழ்நாட்டு, கர்நாடக என இரண்டிற்கும் எங்களது ஆதரவு உள்ளது என பொதுவாக கூறி, ஒரு முடிவை எடுக்காமல் தப்பித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினரோ, மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை ஐபிஎஸ், மக்களிடம் நற்பெயரை வாங்க பல்வேறு வகையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வரிசையில், கடந்த 5-ம் தேதி மேகதாது அணை கட்டும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு எதிராக தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தார். 

ஆனால் இதேபோல, அமமுகவும் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 6-ம் தேதி கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு போலீஸார் மறுப்பு தெரிவித்தது. அதேபோல பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்திற்கும் போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசாரின் உத்தரவை மீறி, திட்டமிட்டப்படி திலகர் திடலில் உண்ணாவிரதத்திற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் நடந்தது. உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் இடத்துக்கு மாட்டு வண்டியில் கட்சி தொண்டர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்தார் அண்ணாமலை. போலீசார் நினைத்திருந்தால், உண்ணாவிரதப் போராட்டத்தையோ, அண்ணாமலையின் ஊர்வலத்தையோ தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை. 

பாஜகவினர் திட்டமிட்டப்படி உண்ணாவிரதத்தை நடத்தி முடித்தனர். சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் ஊரடங்கையும் மீறி, முகக் கவசம் இன்றி, சமூக இடைவெளியின்றி கலந்து கொண்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் பொதுசெயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஜி.கே.முரளிதரன். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நண்பர்களே... கிட்டத்தட்ட ஒருவார காலமாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கொரோனா பெருந்தொற்றை விரட்ட பொதுமக்கள் கூடும் ஒவ்வொரு இடங்களாகப் பார்த்துப் பார்த்து மாஸ்க் அணியாதவர்களை திட்டி, கண்டிப்புக்காட்டி, கெஞ்சி, வேண்டுகோள் வைத்து, அரசு உத்தரவை நிறைவேற்ற ஒரு அதிகாரி எப்படி செயல்படுவாரோ அதைவிட நூறுமடங்கு தீவிரமாக செயல்பட்டு, பஸ்ஸிலும், ஆட்டோவிலும், சந்தைகளிலும், மாஸ்க் போடாதவர்களுக்கு கையோடு கொண்டுவந்த மாஸ்க்கை மாட்டச்சொல்லிக் கொடுத்ததை எல்லா காட்சி ஊடகங்களும் தொடர்ந்து காட்டியதை எல்லோரும் பார்த்தோம். 

அமமுக-வின் தலைவர் தினகரன் கர்நாடக பாஜக அரசு மேகதாதுவில் அணை
கட்டுவதை எதிர்த்து நடத்தப்போவதாக அறிவித்த உண்ணாவிரதத்தை அரசு கொரோனா பரவாமலிருக்க போட்டிருந்த தடை உத்தரவை மதித்து தள்ளி வைத்துவிட்டார். தமிழகத்திலேயே அமமுக கொஞ்சம் கூடுதலாக சதைப்பிடிப்புள்ள பகுதி தஞ்சைத்தரணி...
அவரே மக்கள் நலனை முன்னிருத்தி போராட்டத்தை தள்ளி வைத்துவிட்டார்.

ஆனால் ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரியாக மக்கள் பணியாற்றிய "ப்ரௌவ்டு கன்னடீகா" அண்ணாமலை  அரசு உத்தரவை காற்றில் தூக்கி கடாசிவிட்டு உண்ணாவிரத கோசத்தோடு ஊரைக் கெடுக்க உட்கார்ந்துவிட்டார். அவரை அலங்கரிக்க, பல்லக்கில் தூக்கி பவிசாக்க, பதவிக்காக, துண்டு போட தமிழகம் முழுக்கவும் இருந்து ஆர்எஸ்எஸ்-காரர்களும் முருகனால் ஞானஸ்நானம் செய்விக்கப்பட்ட போர் நாட் செவன் போர் நாட் டூ போர் ட்வென்ட்டி வகையறாக்களும் மாஸ்க் அணியாமலும் சிலர் அணிந்தும் நோய் பரப்பும் ரோபோக்களாக வருவதும் போவதுமாக இருந்ததை கானொலி ஊடகங்களில் கண்டோம்வெகுண்டோம்.

அண்ணாமலை எப்போதெல்லாம் மைக்கை கையில் எடுத்து "தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம்... தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம்" என்று அறிவிக்கிறாரோ.... 
அப்போதெல்லாம் சொல்லி வைத்தாற்போன்று வேண்டுமென்றே மேடையில் வாட்டர் பாட்டில் சப்ளை தூள்பறந்ததைப் பார்த்து வாய்விட்டுச் சிரிக்காத மக்களே இன்று டி வி முன் இல்லை."இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" போன்று ஒரு நல்ல காமெடிப்படம் பார்த்த திருப்தி இன்று மக்களுக்கு. "அண்ணாமல அண்ணாமல அன்னந்தண்ணி உண்ணாமல" என்று பாடாத ஒன்றுதான் பாக்கி! நம் அன்புத்தலைவர் அண்ணன் அழகிரி "அண்ணாமலை வயிற்றுக்கோளாரை சரி செய்ய உண்ணாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்.

கர்நாடகாவில் அணை கட்டுவதை தடுக்க உண்மையிலேயே இவர்கள் நினைத்தால்
கர்நாடகாவில் ஆளும் அவர்கள் கட்சி முதல்வர் பொம்மையை  நேரில் சந்தித்து சொல்லலாம்.அவர்கள் கேட்கவில்லை என்றால் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் செய்யலாம்
அதை விட்டுவிட்டு மேகதாட்டு அணைக்கட்டை தடுப்பதாக நாடகமாடி. தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை தடுக்கப் போராடிக் கட்டிய நோய்த் தடுப்பணையை அல்லவா உடைக்கிறார்கள்" என்று சொன்னதில் உள்ள நியாயத்தை உணராமல் அண்ணன் அழகிரியை அரசியலிலிருந்தே ஒழிப்பதாக கூவிக் கொந்தளிக்கிறார் குறுக்கு புத்தி அண்ணாமலை. சூரியச்சூட்டையே  தூக்கிச்சுருட்டி தூரப்போட்ட அண்ணன் அழகிரி. இந்த சுடுதண்ணிச் சூடுபட்டா சுருங்கப்போகிறார். அரசியலில் பாலபாடம்கூட பாங்காய் படிக்காத ஆட்டுக்கார அண்ணாமலை அண்ணன் அழகிரிக்கு சவால் விடுவதெல்லாம்
சவளைப்பிள்ளை சடுகுடு ஆடி மெடல் வாங்க ஆசைப்படும் சவடால் கதைதான். அது போகட்டும் நண்பர்களே.

என்னுடைய வருத்தமெல்லாம் அண்ணாமலைக்கு ஒரு நியாயம் தினகரனுக்கு ஒருநியாயம் என்று ஆட விட்டு வேடிக்கை பார்த்த தமிழக அரசின் மீதுதான். பாஜகவை உண்ணாவிரதம் இருக்க இந்தக் கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் அனுமதித்ததே அரசு செய்த இமாலயத்தவறு என்கிறார்கள் தஞ்சைத்தரணி வேளாண் பெருமக்கள். திமுக என்னதான் வளைந்து கொடுத்து பாஜகவோடு இணக்கமாய் போக முயற்சித்தாலும் அவர்களைப் பொறுத்தவரை திமுக என்றாலே ஹிந்து ஜென்ம விரோதி ஈரோடு ராமசாமி நாயக்கர் பார்ட்டிதான். அறிவு எழுச்சி உணர்ச்சி முழக்கமிட்ட ஆரியமாயை ஆசிரியர் அண்ணா துரையின் பார்ட்டிதான் கண் திறந்திருந்த காலம் முழுக்க கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நெஞ்சில் தாங்கிய நெருஞ்சிமுள் கலைஞர் கருணாநிதியின் பார்ட்டியாகத்தான் பார்ப்பார்களே ஒழிய பாசப்பார்வை பார்க்கவே மாட்டார்கள்.

எனவே மத்திய மண்டூகங்களோடு மஞ்சள் குளிக்கலாம் என்று மனப்பால் குடித்து மதிப்பிழந்து விடாதீர்கள் என்று உண்மையான தோழமைக்கட்சி காரனாக உரிமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இனியாவது தளபதி ஸ்டாலினின் தமிழக அரசு இப்படிப்பட்ட இம்சை அரசர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று தஞ்சைத்தரணி மக்கள் சார்பாக வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். என தனது முகநூல் பதிவி ஜி.கே.முரளிதரன் பதிவிட்டுள்ளார்.