கோத்தபய இலங்கை திரும்புவாரா? வெளியான புதிய தகவல்!

கோத்தபய இலங்கை திரும்புவாரா? வெளியான புதிய தகவல்!

சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

மாலத்தீவிலிருந்து வெளியேறி சிங்கப்பூருக்கு

 இலங்கையில் கோத்தபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் கடந்த 9 ஆம் தேதி அதிகரித்ததுடன் போராட்டகாரர்கள், அதிபர் மாளிகை , அலரி மாளிகை, மற்றும் பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு அங்கு தங்கியிருந்தனர்.

அரசியல் நெருக்கடி நிலைமை அதிகரித்த சூழலில் கோத்தபய ராஜபக்ச, விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு சென்று அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றதுடன் அங்கிருந்த பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.

சிங்கப்பூரில் 14 நாட்கள் மட்டுமே அனுமதி

 சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம்அறிவித்திருந்தது. அத்துடன் அவருக்கு அரசியல் தஞ்சம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் தங்கியிருக்க வழங்கிய அனுமதி  காலம் முடிவடையும் நிலையில், அவர் அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.