அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்? ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புது வியூகம்!

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கம்? ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் புது வியூகம்!

முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியில் இரட்டைத் தலைமை தான் இருந்து வந்தது. ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியத் தேர்தல் ஆணையமும் இரட்டைத் தலைமையை அங்கீகரித்தது.

சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி ஒற்றைத் தலைமை என்னும் முழக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியையே முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பெரும்பான்மையான தொண்டர்களின் ஆதரவு இல்லாததால் கட்சியில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது. இரு தரப்பினரும் மாறி போஸ்டர் அடித்து தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.

தற்போது மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ”அ.இ.அ.தி.மு.க தலைமைக்கழக அறிவிப்பு, கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக” அந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சுவரொட்டி அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

- ஜோஸ்