சசிகலா சாப்ட்டரை க்ளோஸ் பண்ண இதான் வழி... மிஸ் ஆகாத எடப்பாடி ஸ்கெட்ச்... ஒரே போடாக போட்டு தூக்கிய பதவி!!  

சசிகலா சாப்ட்டரை க்ளோஸ் பண்ண இதான் வழி... மிஸ் ஆகாத எடப்பாடி ஸ்கெட்ச்... ஒரே போடாக போட்டு தூக்கிய பதவி!!  

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக  எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்தெடுக்கப்பட்டார். இதே போல் சட்டமன்ற அதிமுக கொறடாவாக எஸ்.பி வேலுமணியும், துணை கொறடாவாக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டமன்ற அதிமுக பொருளாளராக கடம்பூர் ராஜூவும் செயலாளராக கே.பி அன்பழகனும் துணைச் செயலாளராக மனோஜ் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இது வரை நிலவி வந்த அரசியல் குழப்பங்களுக்கு இந்த தேர்வு முடிவுகட்டியுள்ளதாக கூறப்பட்டாலும், இந்த தேர்வு அதிமுகவில் புதிய குழப்பங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதிமுகவின் இரண்டு வலிமைவாய்ந்த அரசு பதவிகளும் எடப்பாடிக்கும்(எதிர்க்கட்சி தலைவர்) எஸ்.பி.வேலுமணிக்கும்(கொறடா) ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் கட்சியிலே அதிருப்தி எழுந்துள்ளது. 

இது தவிர டம்மியான எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை எப்படி பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டார்? என்ற கேள்வி அதிமுகவை தாண்டியும் எழுப்பப்படுகிறது. ஏனெனில் சென்றவாரம் வரை இந்த பதவியை ஏற்க பன்னீர்செல்வம் மறுத்தே வந்துள்ளார்.  இப்படி டம்மியான பதவியை எனக்கு கொடுக்க எடப்பாடி முன்வந்துள்ளார், இதை எப்படியும் ஏற்கப்போவதில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து கூறியும்வந்துள்ளார். இதன் காரணமாகவே தான் புது வீட்டுக்கு செல்வதை காரணமாக கூறி கடந்த வாரம் நடந்த அதிமுக கூட்டத்தை அவர் புறக்கணித்திருந்தார். 

பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை மறுத்தபின் அந்த பதவியை பிடிக்க அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கடுமையாக முயன்றுள்ளனர். அதிலும் வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எடப்பாடி மற்றும் பன்னீர் என இரண்டு பக்கமும் இந்த பதவிக்காக பேசியுள்ளனர். ஆரம்பத்தில் வைத்தியலிங்கத்துக்கு இந்த பதவியை விட்டுக்கொடுக்க பன்னீர்செல்வம் முன்வந்த நிலையில் இந்த பதவியில் பன்னீர்செல்வம் தான் அமரவேண்டும் என எடப்பாடி விடாப்பிடியாக இருந்துள்ளார். 

இதற்காக தனியார் விடுதியில் பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியை நீங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார். முதலில் இதை கடுமையாக மறுத்த பன்னீரும் சசிகலாவை முன்வைத்து எடப்பாடி பேச பிறகு இறங்கிவந்துள்ளார். அதாவது பன்னீர்செல்வம் இந்த பதவியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தொண்டர்கள் மத்தியில் பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் சென்றுவிட்டாரா? என்ற சந்தேகம் ஏற்படும். அப்படி சந்தேகம் வந்தாலே அவர்களை சசிகலா தன் பக்கம் திருப்பிவிடுவார்.  ஒருவேளை கட்சிக்குள் அவர்கள் வந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

ஆகவே இந்த பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது தான் தொண்டர்கள் நம் தலைமை மீது நம்பிக்கை வைப்பார்கள். அப்போது தான் நம் கட்சியில் எந்த உள்கட்சி மோதலும் இல்லை என்று மற்றவர்களும் நம்புவார்கள் என்று கூற ஒருவழியாக இந்த பதவியை ஏற்க பன்னீர் செல்வம் சம்மதித்துள்ளார். இப்படி சசிகலாவை வைத்து பன்னீர்செல்வத்தை வழிக்கு கொண்டு வந்து கட்சியில் தான் மட்டுமே மிகப் பெரியவன் என்ற பிம்பத்தை தொண்டர்களிடம் விதைத்துள்ளார் எடப்பாடி  என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.