மகாராஷ்டிராவில் நடக்கும் பங்காளி சண்டை!

பாஜக சரிசமமாக தொகுதிகளை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் 25 ஆண்டு கால கூட்டணி உடைந்தது.

மகாராஷ்டிராவில் நடக்கும் பங்காளி சண்டை!

சிவசேனா - பாஜக இடையே நடக்கும் மோதல் சிவசேனாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. அது பெரும் பிளவாக மாறுமோ என்ற அச்சம் அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களை தம் பக்கம் கொண்டுவந்து விட்டார்.

ஏக்நாத் ஷிண்டே பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகிவிட்டார். ஆனாலும் சிவசேனா தொண்டர்கள் உத்தவ் தாக்கரேவையே ஆதரிப்பதாகத் தெரிகிறது. மேலும் பல தொண்டர்கள் அமைதியாக நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளனர்.

25 ஆண்டுகால கூட்டணி உடைந்தது

பாஜக-சிவசேனா மோதல் என்பது 2014ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது எனக் கூறலாம். அப்போது நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாதிக்குப் பாதி இடங்களில் இரு கட்சிகளும் போட்டியிடுவது எனப் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் பாஜக சரிசமமாக தொகுதிகளை பகிர்ந்து கொள்ள மறுத்ததால் 25 ஆண்டு கால கூட்டணி உடைந்தது.

பாரதிய ஜனதா கட்சியும் சிவசேனாவும் தனித்தனியே போட்டியிட்டன. மகாராஷ்டிர சட்டமன்றத்திற்கு மொத்தமுள்ள 288 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்களிலும் தேர்வானது. சிவசேனா பிரதான எதிர்க்கட்சி நிலையைப் பெற்றது. பிறகு சில நாட்களில் இரண்டு கட்சியும் ஒன்றுபட்டு கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்தக் கூட்டணி 2019 வரை தொடர்ந்தது.

மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி

மகாராஷ்டிராவில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் பாஜக 106 இடங்களையும் சிவசேனா 56 இடங்களையும் பெற்றது. ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனாவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் எனவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் என்று பேசி முடிவெடுத்த பிறகு தான் தேர்தலைச் சந்தித்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக அதற்கு இணங்கவில்லை எனக் கூறி கூட்டணியிலிருந்து வெளியேறியது சிவசேனா.

இதன் பிறகு தான் மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராதத் திருப்பங்கள் ஏற்பட்டன. சரத் பவாரின் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஏற்பட்டது. மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி என்ற பெயரில் இக்கூட்டணி அழைக்கப்பட்டது. இக்கூட்டணியை உடைக்க பல வழிகளிலும் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது வெற்றிபெறவில்லை.

உடைக்கப்படுகிறதா சிவசேனா?

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுக்கு இடையே எந்த முரணும் ஏற்படாதவாறு அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் கவனமாகக் கையாண்டனர்.

இந்தச் சூழலில் சிவசேனாவைச் சேர்ந்த அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து கொண்டு சிவசேனா தலைவர் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடனான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டுமென அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமெனவும் கோரினார்.

சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் லாட்கே மாரடைப்பால் கடந்த மே மாதம் மரணமடந்தார். இதனால் சிவசேனாவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 55 என்றானது. முதலில் ஷிண்டே அதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 என்றிருந்தது. இது மேலும் அதிகரித்து 39 சட்டமன்ற உறுப்பினர்கள் ஷிண்டே அணிக்குத் தாவினர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பல முறை முயன்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ஒன்றினைக்க முடியவில்லை. இதனால் கடந்த ஜூன் 29 அன்று முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தவ் அறிவித்தார்.

முதலமைச்சரான ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தவுடன் கடந்த ஜூன் 30 அன்று பாஜக ஆதரவுடன் முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே. பாரதிய ஜனதா கட்சியின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவரோ ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக முன்மொழிந்தது மகாராஷ்டிர அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

மராத்தியர் நலனுக்கான கட்சியாக தொடங்கப்பட்ட சிவசேனா, 1970களில் இந்துத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு ஆர்.எஸ்.ஏஸ் மற்றும் பாஜகவுடன் ஒன்றிணைந்து செயல்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி அனைத்து நிலைகளிலும் ஒற்றைமயக் கொள்கையை முன்னெடுத்து வரும் சூழலில் இன்னொரு இந்துத்துவக் கட்சி செயல்படுவதையோ செல்வாக்குபெறுவதையோ விரும்பாது. உத்தவ் தாக்கரேவும் பாஜகவுடைய இந்துத்துவம் வேறு தம்முடைய இந்துத்துவம் வேறு என சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2014 தொடங்கிய பாஜக-சிவசேனா மோதல் என்பது மகாராஷ்டிராவின் அசைக்க முடியாத சக்தியான சிவசேனாவையே பிளவுபடுத்தும் நிலைக்குச் சென்றுள்ளது.  

- ஜோஸ்