விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...

2017ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்,  தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 4 கோடி பணத்தை வட்டியுடன் 4 வாரத்திற்குள் திருப்பி செலுத்த வெண்டும் எனவும் உத்தரவு அளித்துள்ளது.


தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக பலமுறை அவகாசம் அளிக்கப்பட்டதை அவர் நிராகரித்ததைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு  தண்டனை குறித்த தீர்ப்பு ஜூலை 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில் விசாரணக்கு பலமுறை அழைக்கப்பட்டும் ஆஜராகாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று  நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் மற்றும் நீதிபதி சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக மார்ச் 10 ஆம் தேதி, மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கை  விசாரித்துவிட்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

பிப்ரவரியில் மல்லையா ஆஜராவதற்கான இறுதி வாய்ப்பை வழங்கிய நேரத்தில், நவம்பர் 30, 2021 தேதியிட்ட  உத்தரவுகளின்படி அவர் செயல்பட வெண்டும் எனவும் அவர் தனது சமர்ப்பிப்புகளை அவரே அல்லது அவரது வழக்கறிஞர் மூலமாக முன்வைக்கவும் உச்ச நீதிமன்றம் அவருக்கு வாய்ப்பு வழங்கியிருந்தது.

மல்லையா இல்லாத நிலையில் தண்டனை விசாரணையை தொடரலாமா என்று நீதிமன்றம் யோசித்திருந்த நிலையில், இந்த வழக்கில்  மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, அவர் ஆஜராக இறுதி அவகாசம் அளித்த பிறகு வழக்கை தொடரலாம் என்று பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லையா யார்?

விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி சென்ற இந்திய தொழிலதிபர். 17 இந்திய வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ள மல்லையா, நாட்டில் மோசடி மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஆவார்.
 
முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான மல்லையா, யுனைடெட் ஸ்பிரிட்ஸின் முன்னாள் தலைவர் ஆவார். அவர் தற்போது யுனைடெட் ப்ரூவரீஸ் குழுமத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். முன்னதாக, அவர் சனோஃபி இந்தியா மற்றும் பேயர் கிராப் சயின்ஸ் போன்ற பிற நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.
 
2005 இல் தொடங்கப்பட்ட விமான நிறுவனமான கிங்பிஷ்சர் 2008 இல் உலகளாவிய மந்தநிலை மற்றும் உயர்ந்த எரிபொருள் விலைகள் அதை ஒரு முட்டுக்கட்டைக்கு கொண்டு வந்ததால் அதன் செயல் நிறுத்தப்பட்டது.
 
விமான நிறுவனம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கடன் வழங்கியவர்களின் எதிர்ப்பை எதிர்கொண்ட மல்லையா, 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.  2016 முதல் மல்லையா தனது கடனைச் செலுத்துவதாகவும் கூஇயிருந்தார்.

மல்லையா தனது குழந்தைகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை மாற்றியதாகவும், அதன் மூலம் நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்திருந்தது.

அதன்பிறகு உச்ச நீதிமன்றம் அவரை 2017 இல் அவமதிப்பு குற்றவாளி எனக் கண்டறிந்தது. ஆகஸ்ட் 2020 இல், நீதிமன்றம் 2017 தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய அவரது மனுவை நிராகரித்தது மற்றும் அவரை நீதிமன்றம் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.