கோத்தபயவை கைது செய்யுங்கள்...இங்கிலாந்து எம்.பி கடிதம்!

கோத்தபயவை கைது செய்யுங்கள்...இங்கிலாந்து எம்.பி கடிதம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை கைது செய்ய உடனே நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்திலிருந்து சிங்கப்பூருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி

ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். 

போராட்டக்காரர்களின் கோரிக்கை

இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் காலிமுகத் திடலில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 9 ஆம் தேதி போராட்டக்காரர்களால் அதிபர் மாளிகை கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய அரசுக் கட்டடங்கள் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அதிபர், பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் இலங்கை அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

மாலத்தீவுக்கு தப்பியோடினார்

கோத்தபய ராஜபக்ச அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளோடு இலங்கையின் இராணுவ விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. மாலத்தீவிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவியதால் அங்கிருந்து சவுதி அரேபிய விமானச் சேவையின் விமானத்தில் சிங்கப்பூருக்குச் சென்றார். சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு 14 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

போர்க்குற்றவாளி ராஜபக்ச

கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கோல்பர்ன்   சிங்கப்பூர் அரசின் தலைமை வழக்குரைஞருக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் எனவும், அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.  

கோத்தபய ராஜபக்சவினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் இங்கிலாந்தில் இருப்பதாகவும்,  கோத்தபய தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களை நேர்காணல் செய்வதற்கு உங்களுக்கு எம்மால் உதவ முடியும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோத்தபய ராஜபக்சேவிற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

- ஜோஸ்