அப்டேட்டே இல்லாத படத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பா? யார் இதற்கு காரணம் ?

உலகமெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வலிமை அப்டேட்..!

அப்டேட்டே இல்லாத படத்துக்கு இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பா? யார் இதற்கு காரணம் ?


செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு வருவது ஒருப்புறம் நகைப்புக்குள்ளாகி இருக்கிறது என்றாலும், ஒரு படத்தின் பெயர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயர் மட்டுமே வெளிவந்திருக்கும் நிலையில், ரசிகர்களின் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை காண முடிகிறது. 

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும். அதிலும் விஜய், அஜித் போன்றோர் படத்திற்கு ஃப்ர்ஸ்ட் லுக் முதல் படம் வெளியாவது வரை அனைத்தையும் ரசிர்கள் கொண்டாடுவது உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு படத்தின் அப்டேட் கேட்டு போகும் இடமெல்லாம் ரசிகர்கள் ஆராவாரம் செய்து வருவது புதுமையாக உள்ளது. 

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத்தே அவரின் 60வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இங்கிலிஷ் விங்லிஷ் படத்தில் மறைந்த ஸ்ரீதேவியுடன் ஒரே ஒரு காட்சியில் கவுரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

அப்படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி, அஜித்துடன் பணியாற்ற வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், துர்தஷ்டவசமாக அதற்கு முன்னரே இறந்து போனார். அவரது கனவை நினைவாக்கும் வகையில் கணவர் போனி கபூர் அடுத்ததாக அஜித்தின் 60-வது படத்தை தயாரிக்க ஒப்பந்தமிட்டார். அதன் படி கடந்த 2019-ம் ஆண்டு அஜித்தின் 60-வது படத்திற்கு பூஜை போடப்பட்டது. 

சமீப காலமாக நடிகர்கள் புதிதாக நடிக்கும் படங்களில் பெயர்கள் வெளியாவதற்கு முன்பு, அந்நடிகர்களின் பட எண்ணிக்கையை வைத்து ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது. இந்த டிரெண்டை உருவாக்கியவர் அஜித். ஆனால் அஜித்தின் 60-வது பட பூஜையின் போது வலிமை என பெயரிடப்பட்டே பூஜைப் போடப்பட்டது. இது ரசிகர்களின் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. 2020-ம் ஆண்டின் பிற்பகுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 

அதன் பிறகு அவ்வப்போது படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்ட போது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கும் இப்படத்தில் அஜித், ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இடையில் அஜித் குமார் இப்படத்தில் போலிசாக நடிக்கிறார் என்ற சிறு அப்டேட் மட்டுமே வெளியிடப்பட்டது.

இதனை தவிர்த்து வலிமை படத்தின் எவ்வித அப்டேட்களும் அறிவிக்கப்படாத நிலையில், ரசிகர்கள் உலகமெங்கும் வலிமை அப்டேட் குறித்து பலரிடமும் கேட்கத் துவங்கினர். கிரிக்கெட், கால்பந்து மைதானம் தொடங்கி சாமியாடுபவர்கள் வரை வலிமை அப்டேட் என்ன என்ன என்று ரசிகர்கள் மிக ஆர்வமுடன் உள்ளனர். இதற்கிடையில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாத இப்படத்தின் உலகளாவில நாடக, செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் உரிமைகளுகாக ரூ.200கோடி வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நேரத்தில் வரும் 15-ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது ரசிகர்களை உற்சாக மழையில் ஆழ்த்தியுள்ளது.