"உள்ளடி வேலை பார்த்த உபிக்கள் யார்?" துடைத்து தூக்கியெறிய ஸ்கெட்ச்... ஸ்டாலின் கைக்கு வந்த 234 தொகுதி லிஸ்ட்!! 

"உள்ளடி வேலை பார்த்த உபிக்கள் யார்?" துடைத்து தூக்கியெறிய ஸ்கெட்ச்... ஸ்டாலின் கைக்கு வந்த 234 தொகுதி லிஸ்ட்!! 

சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமானவர்களும், உள்ளடி வேலை பார்த்தவர்களும் கூடிய விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.  

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றது. அதில் திமுக தனித்து 125 இடங்களில் வெற்றிபெற்றது. அதேபோல அதிமுக கூட்டணி 75 இடங்களிலும், அதிமுக மட்டும் தனித்து  65 இடங்களில் வெற்றிபெற்றது. இந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றாலும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது. 

சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அணி 200 இடங்களுக்கும் மேல் பிடிக்கும் என்றும் திமுக மட்டுமே 150 இடங்களுக்கும் அதிகமாக வெற்றிபெறும் என்றே திமுக தலைவர்கள் கூறிவந்தனர். திமுக அதிக இடங்களில் போட்டியிட்டால் அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் பிரஷாந்த் கிஷோர் தரப்பிலும் கூறப்பட்டது. இதன் காரணமாகவே கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக இடங்களை கொடுத்து கூட்டணி கட்சிகளையும் திமுக சின்னத்தில் போட்டியிடவைத்தது. 

ஆனால் தேர்தல் முடிவுகள் திமுக எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. திமுக தலைமை  150க்கும் மேல் இடங்களை எதிர்பார்க்க 125 இடங்களே கிடைத்தது. கொங்கு மண்டலத்தில் கடும் பின்னடைவை சந்தித்த திமுக, தென்மண்டலத்திலும் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. வடக்கில் கரூர் மாவட்டத்தில் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது. 

தேர்தல் முடிந்தபோதே பல இடங்களில் திமுகவினர் உள்ளடி வேலை பார்த்து கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க வைத்ததாகவும், சிலர் தேர்தல் வேலையே செய்யவில்லை என்றும் பல வேட்பாளர்கள் திமுக தலைமையிடம் புகார் அளித்திருந்தனர். அப்போது கொரோனா சூழல் காரணமாக அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை. ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்துவருவதால் கட்சி உள்விவகாரங்களில் தலையிட திமுக தலைவர் முடிவுசெய்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

மேலும் வேட்பாளர்கள் தோல்விக்கு யார் காரணம் என்றும், உள்ளடி வேலை பார்த்தவர்கள் யார் என்பது பற்றி மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களிடம் ஸ்டாலின் கணக்கு கேட்டதாகவும், அந்த கணக்கு தற்போது ஸ்டாலினின் கைகளுக்கு வந்துள்ளதாகவும்,  கூடிய விரைவில் அவர்கள் களையெடுக்கப் படுவார்கள் என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது. இதனால் திமுகவின் முக்கிய புள்ளிகள் சிலர் கலக்கத்தில் இருக்கிறார்கள்.