2வது திருமணத்தை மறைத்து காதல்... இரட்டை பிறவி என்ற பொய்யை நம்பிய காதலியின் குடும்பம்...

சென்னை அடுத்த போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த வில்லாண்டர், தனது அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஆவடியைச் சேர்ந்த பெண்னை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.

2வது திருமணத்தை மறைத்து காதல்... இரட்டை பிறவி என்ற பொய்யை நம்பிய காதலியின் குடும்பம்...

இந்நிலையில் இளம் பெண்ணின் நண்பர் ஒருவர் மூலம் வில்லாண்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த இளம் பெண் வில்லாண்டரிடம் கேட்டுள்ளார்.இதைக் கேட்டு அதிர்ந்து போன அவர், இளம் பெண்ணிடம் தான் இரட்டை பிறவி என்றும் தனது சகோதரனுக்கு திருமணம் நடைபெற்று துபாயில் குடும்பத்துடன் வசித்து வருவதாக பொய்யை கட்டு அவிழ்த்து விட்டுள்ளார்.

இதனை நம்பிய அந்த இளம் பெண்ணின் வீட்டார் திருமண வேலையை தொடர்ந்து செய்துவந்துள்ளனர்.வில்லாண்டர் திருமண வேலைக்கு என பெண் வீட்டாரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். இதனால் மீண்டும் சந்தேகம் அடைந்த அந்த இளம் பெண், வில்லாண்டர் குறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவருக்கு பல அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இளம் பெண்ணை நம்ப வைக்க தன்னுடைய அனைத்து அடையாள அட்டைகளையும் போலியாக தயாரித்து தான் இரட்டை பிறவி என நம்ப வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் இளம் பெண்ணின் நண்பர் ஒருவர் மூலம் ஆதாரப் பூர்வமாக வில்லாண்டருக்கு திருமணமானது தெரியவரவே பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

இந்த சம்பவம் குறித்து இளம் பெண் கடந்த ஏப்ரல் மாதம் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். வில்லாண்டர் மற்றும் அவரது தாயை அழைத்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் நடத்திய நாடகத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து தான் வாங்கிய பணத்தில் 1 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையை பின்னர் வழங்குவதாக தெரிவிக்கவே, பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் வில்லாண்டர் மீதமுள்ள பணத்தை திரும்ப கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். வில்லாண்டரை நேரில் சந்தித்து இளம் பெண் பணத்தை கேட்டுள்ளார். அப்போது  வில்லாண்டர் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் அதிர்ந்து போனவர், ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனக்கு நேர்ந்ததை கூறியுள்ளார். 

இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி கொலை மிரட்டல், ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்து வரும் வில்லாண்டர் மற்றும் அவரது தாயை போலீசார் தேடி வருகின்றனர்.