30 வருஷம் கஷ்டப்பட்டு வாங்கிய நகை - மர்மநபர்களிடம் பறிகொடுத்துவிட்டு கண்கலங்கிய மூதாட்டி...

30 ஆண்டுகளாக அலைந்து திரிந்து வீட்டு வேலை செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய நகையை, கொள்ளையர்கள் நொடிப்பொழுதில் ஏமாற்றி வாங்கி சென்றுவிட்டதாக கண்கலங்கும் மூதாட்டின் உருக்கமான பேச்சு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது….  

30 வருஷம் கஷ்டப்பட்டு வாங்கிய நகை - மர்மநபர்களிடம் பறிகொடுத்துவிட்டு கண்கலங்கிய மூதாட்டி...

சென்னை தியாகராய நகர் கண்ணம்மாப்பேட்டை அடுத்த எஸ்.பி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தான் சுலோச்சனா என்ற 72 வயதான மூதாட்டி. வயது முதிர்ந்தவரான இவர் தனது மருமகளான மங்கள கெளரியுடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என முடிவெடுத்த மூதாட்டி, சம்பவதன்று மாலை பாண்டி பஜார் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள முப்பாத்தம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். 

அப்போது அங்கே இருந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் மூதாட்டி சுலோச்சனாவை தடுத்து நிறுத்தி, உங்களை எங்களது சார் அழைக்கின்றார் என அன்போடு கூறியுள்ளனர்.  என்னவென்று கேட்கச் சென்ற மூதாட்டியிடம் மற்றொரு நபர் 3 தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை கத்தியால் குத்தி நகைகளை பறித்துச் சென்றுவிட்டார்களே ஒரு கும்பல் அது பற்றி உங்களுக்கு தெரியாதா ? என்று அக்கரையுடன் பேசுவது போன்று பாவனை செய்தனர் அந்த நபர்கள். 

அதற்கு அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என மூதாட்டி கூறியுள்ளார். இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளை கும்பல் மூதாட்டியிடன் நகைகளை அணிந்து வெளியில் எங்கும் செல்லாதிர்கள் அது உங்களுக்கு தான் ஆபத்து ஆகவே நகைகள் அனைத்தையும் கழற்றி கொடுங்கள் அதனை பத்திரமாக பேப்பரில் வைத்து மடித்து கைப்பையில் வைத்து தருகின்றேன் என கூறியுள்ளனர். 

திருடி செல்ல தான் நகைகளை கேட்கின்றார்கள் என்பதையறியாத மூதாட்டி, நகைகள் அனைத்தையும் கழற்றி அவர்களிடம் கொடுக்க, அவர்களோ அதை ஒரு பேப்பரில் வைத்து மடித்து கைப்பையில் வைப்பது போன்று நடித்து நகைக்கு பதில் வேறோன்றை வைத்து கொடுத்து ஏமாற்றியுள்ளனர். 

அதை வாங்கி சென்ற மூதாட்டி சுலோச்சனா, சிறிது துரம் சென்றதும் களைப்படைந்து அருகில் இருந்த தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் குடித்துள்ளார். பின்னர் கைப்பையை திறந்த பார்த்த மூதாட்டிக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. நகைகள் அனைத்தும் காணாமல்போனதை கண்டு கதறி அழுத மூதாட்டி, மீண்டும் வந்த வழியே சென்று அங்கிருந்தவர்களிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

நகையை பறிகொடுத்த மூதாட்டி மேல் இறக்கப்பட்ட சிலர் அவரை அருகில் இருந்த பாண்டி பஜார் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு தனக்கு நடந்தவற்றை மூதாட்டி போலீசாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.