ஏலச்சீட்டு நடத்தி 70 லட்சம் ரூபாய் மோசடி... தம்பதியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு...

சென்னையில் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் சுமார் 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏலச்சீட்டு நடத்தி 70 லட்சம் ரூபாய் மோசடி... தம்பதியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு...

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர்கள்  திவ்யா (35), செந்தில் (40) தம்பதியர். இவர்கள் தங்கள் வீட்டிலேயே மாத ஏலச்சீட்டு, டேபிள் சீட்டு, ஸ்கூல் பண்டு, மாதப் பண்டு, தீபாவளி பண்டு, கிறிஸ்துமஸ் பண்டு உள்ளிட்ட பெயர்களில் முறையான அனுமதி பெறாமல் மாதாந்திர ஏலச் சீட்டும், பண்டும் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் திவ்யா மற்றும் செந்தில் தம்பதியர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷன் (31) மற்றும் குடும்பத்தார் 5 பேர் உள்ளிட்ட பலரும் சேர்ந்து சீட்டு மற்றும் பண்டுப் பணம் கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் தாங்கள் கட்டிவந்த சீட்டு முதிர்வடைந்த பிறகும் திவ்யா செந்தில் தம்பதியர் பணத்தை திரும்பத் தராமல் சீட்டுப் பணம் கட்டிதவர்களிடம் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பிரியதர்ஷன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். குறிப்பாக திவ்யா செந்தில் தம்பதியர் தங்கள் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாகவும், திவ்யா மற்றும் செந்தில் தம்பதியர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.  

இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சீட்டு மோசடி மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் திவ்யா, செந்தில் தம்பதியர் முறையான அனுமதி பெறாமல் ஏலச்சீட்டு நடத்தி லட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் திவ்யா, செந்தில் தம்பதியரின் செல்போன் சிக்னல் பயன்பாட்டை ஆய்வு செய்து, அதன் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த திவ்யா மற்றும் அவரது கணவர் செந்தில் ஆகிய இருவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், விசாரணைக்குப் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், முறையான அனுமதி பெறாமல் சீட்டு நடத்துபவர்களை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.