திருச்சியில் ஆசிரியர் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி, காஜா நகரில் வசித்து வரும் இக்பால் என்பவரின் மூத்த மகன் தாமீர். அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் காஜாமியான் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமூக அறிவியல் ஆசிரியர் முருகதாஸ், தாமீரை பிரம்பால் சரமாரியாக அடித்து கொடுமை செய்துள்ளார்.
மேலும், "கொலை செய்து மண்ணில் புதைத்து விடுவேன், என்னை யாரும் கேட்க முடியாது " என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் உடலளவிலும், மனதளவிலும் மாணவர் தாமீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவனின் தந்தை இக்பால் கூறுகையில், "இதுகுறித்து பலமுறை பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளியின் செயலாளர் மற்றும் தாளாளர் அவர்களிடமும் பல முறை பள்ளிக்கு நேரில் வந்தும் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். எனது மகனை எனது வீட்டிற்கு வந்து தலைமை ஆசிரியர் சந்தித்த போதும் முருகதாஸ் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறிவந்தேன். தலைமை ஆசிரியர் மற்றும் செயலாளர்& தாளாளரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்கள்.
ஆனால், ஒரு மாதம் கடந்தும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இறுதியாக கடந்த வெள்ளி கிழமை (24.11.23) அன்று என்னை பள்ளிக்கு நேரில் அழைத்த போதும் எனது மகனின் நிலை தொடர்ந்து சிகிச்சை எடுப்பதற்கு உரிய நிலை ஆகிவிட்டது என கூறினேன். ஆனால் தலைமை ஆசிரியரும், தாளாளரும் எனது மன வேதனையையும், எனது மகனின் நிலை இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் கருதாமல் ரூ. 5000/- (ஐந்தாயிரம் ரூபாய்) வைத்துக்கொள் என்று என் சட்டைப்பாக்கெட்டில் திணித்ததைக் கண்டு அதிர்ச்சியும், கடும் மன வேதனையும் அடைந்தேன். பணத்தை திருப்பியும் கொடுத்துவிட்டேன். இதுவரை எந்த நடவடிக்கை வில்லை எனவே மாணவனை தாக்கிய ஆசிரியர் முருகதாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.