ஆள் வைத்து வழிப்பறி செய்த நபர் : குட்டு அம்பலமானதால் எடுத்த முடிவு !!

விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் சாகுல் ஹமீது தான் தங்களை வைத்து வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியதாக அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆள் வைத்து வழிப்பறி செய்த நபர் : குட்டு அம்பலமானதால் எடுத்த முடிவு !!

விடுதி உரிமையாளர்

சென்னை திருவல்லிக்கேணி முக்தருனிசா பேகம் தெரு பகுதியில் வசித்து வந்தவர் சாகுல் ஹமீது (41). இவர் அதே பகுதியில் உள்ள ஓ.வி.எம். தெருவில் தனியார் தங்கும் விடுதி நடத்தி வந்துள்ளார்.

வழிப்பறி

இந்நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி சாகுல்ஹமீது அதிகாலை விடுதிக்கு வந்துவிட்டு அங்கிருந்து மீண்டும் வீட்டிற்கு ஒரு லட்சம் பணம், 69 கிராம் தங்க கட்டியுடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் சாகுல்ஹமீதை கத்தியால் வெட்டிவிட்டு அவர் வைத்திருந்த பணம், தங்க கட்டி, 20 ஆயிரம் மதிப்புடைய செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

வாக்குமூலம்

மர்ம கும்பல் வெட்டியதால் முதுகு, இடது கால் பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் சாகுல் ஹமீது ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் திருவல்லிகேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (21), சௌக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (24), போஸ்கோ (24), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சாமியா ஹுமாயூன் (32) மற்றும் ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த ராம் குமார் (25) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அதிர்ச்சி

விசாரணையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் சாகுல் ஹமீது தான் தங்களை வைத்து வழிப்பறி நாடகத்தை அரங்கேற்றியதாக அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சாகுல் ஹமீது குருவியாக செயல்பட்டு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சாகுல் ஹமீது திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை

இந்நிலையில் குருவியாக செயல்பட்டு வந்த சாகுல்ஹமீதின் தலைவனுக்கு அவர் நடத்திய வழிப்பறி நாடகம் தெரியவந்ததால், அந்த தலைவன் சாகுல்ஹமீதை தொடர்புகொண்டு மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட பயத்தில் சாகுல்ஹமீது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. எனினும் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே தற்கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.