ஏ.டி.எம். மையங்களில் நூதன தொடர் திருட்டு : வாலிபரை கைது செய்த போலீஸ் !!

திண்டிவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம். மையங்களில் நூதன தொடர் திருட்டு : வாலிபரை கைது செய்த போலீஸ் !!

திண்டிவனம்  பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் கடந்த சில மாதங்களாக அங்கு வருகின்ற வயதானவர்கள் மற்றும் விவரம் தெரியாத நபர்களிடம் பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏடிஎம் கார்டை வாங்கி நூதன முறையில் பணம் திருடப்படும் சம்பவம் நடைபெற்று வந்தது.

இது குறித்து திண்டிவனம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளியை  தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று திண்டிவனத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அதனால் அவரை காவல் நிலையம் அழைத்து விசாரணை  செய்த போது,  அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் நவீன் என்பதும், இவர் திண்டிவனத்தில் பல்வேறு பகுதிகளில் ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் திருடி வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் இவர் மீது திண்டிவனம் காவல்நிலையங்களில் மூன்று வழக்குகள் உள்ள நிலையில் அந்த சம்பவங்களில்  90 ஆயிரம் நூதன முறையில் திருடியது தெரிய வந்தது. இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த ரூபாய் 30 ஆயிரம் மற்றும் 9 போலி ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்மீது வழக்கப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.