தோழி போல் வாட்ஸ் அப்பில் பழகி வந்த வாலிபர்- அந்தரங்க தகவல்கள், படங்களை அனுப்பி ஏமாந்த பெண்கள்

தோழிக்கு அனுப்புவதாக நினைத்து அந்தரங்க தகவல்கள்-படங்களை அனுப்பி பெண்கள் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் ராமநாதபுரம் போலீசில் வாலிபர் சிக்கினார்.

தோழி போல் வாட்ஸ் அப்பில் பழகி வந்த வாலிபர்- அந்தரங்க தகவல்கள், படங்களை அனுப்பி ஏமாந்த பெண்கள்

ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு, அவருடைய தோழி அனுப்புவது போல் வாட்ஸ்-அப்பில் வாலிபர் ஒருவர் தகவல் அனுப்பி  உள்ளார். அந்த பெண்ணின் மூலம் அவருடைய மற்ற தோழிகளின் செல்போன் எண்களையும்  பெற்றுக்கொண்ட அந்த நபர். பின்னர் அந்த பெண்களின் எண்களுக்கும் வாட்சப்பில் குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்துள்ளார்.

தன்னிடம் பேசுவது தனது தோழி தான் என நினைத்துக்கொண்ட மற்ற தோழிகள், தங்களது குடும்ப பிரச்சனை, அந்தரங்க பிரச்சனை மற்றும் புகைப்படங்களையும் வாட்ஸ் அப் தகவல்களாக பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து பெண்களிடம் தோழியாக பேசி வந்த அந்த நபர், ஒரு பெண்ணிடம் பேசும் போது உனக்கு திருமணமாகிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு அந்த பெண் நாம் இருவரும் ஒரே தெருவில் தான் இருக்கின்றோம் எனக்கு திருமணம் ஆகவில்லை என்பது உனக்கு தெரியாதா என பதில் அனுப்பிய பெண், எதிர்முனையில் இருந்துக்கொண்டு குறுஞ்செய்தி அனுப்புபவர் குறித்து சந்தேகமடைந்து,  தனது அனைத்து தோழிகளுக்கும், நெருங்கிய தோழி பெயரில் வரும் வாட்ஸ் அப் தகவல்கள் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளார். 

எந்த தோழியின் பெயரில் தகவல் வந்ததோ அவரை தொடர்பு கொண்டு பேசியதுடன் அவர் பெயரில் வந்த  வாட்ஸ்-அப் தகவல்களையும் அவருக்கு காண்பித்துள்ளார். மேலும் தனது மற்ற தோழிகளையும் உஷார்படுத்தி உள்ளார். சந்தேகமடைந்த அனைத்து பெண்களும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க முடிவெடுத்தனர். அதன்படி இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார்  விசாரணை மேற்க்கொள்ள தொடங்கினர். அதன்படி அந்த பெண்களிடம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்புவது யார் என்பது குறித்தும், அந்த நபர் பெண்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்

விசாரணையில் வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு பெண்களிடம் தோழி போல் பழகி அவர்களது அந்தரங்க தகவல்களை பெற்ற நபர், திருவண்ணாமலையை சேர்ந்த மேலபுழுதியூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பீம்ராவ் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதையும், போலீசார் தன்னை தேடுவதையும் எப்படியோ அறிந்துகொண்ட பீம்ராவ், உஷாராகி செல்போனில் உள்ள தகவல்களை   அழித்துள்ளார்.

மேலும் எந்த பெண்களிடமெல்லாம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி பேசினாறோ அந்த பெண்களை தொடர்பு கொண்டு தன்னை பற்றி போலீசிடம் புகார் அளித்தால், உங்களை பற்றி நான் சேகரித்து வைத்த தகவல்கள், அந்தரங்க ஆபாச படங்கள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்  தலைமையிலான போலீசார் செங்கம் பகுதிக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கியிருந்த பீம்ராவை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், இவருக்கு திருமணமாகி முதல்மனைவி திவ்யா பிரிந்து சென்ற நிலையில் 2-வதாக ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து  கைது  செய்த பீம்ராவை போலீசார், ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.