காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு  : பழைய டெக்னிக்கை பயன்படுத்தி வாலிபரை கைது செய்த போலீஸ் !!

ஆசிட் வீச்சு வழக்கு குற்றவாளியை பழமையான முறையில் தேடி கண்டுபிடித்த பெங்களூரு போலீசார்.

காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு  : பழைய டெக்னிக்கை பயன்படுத்தி வாலிபரை கைது செய்த போலீஸ் !!

பெங்களூருவில் கடந்த 28 ஆம் தேதி தன்னை காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த நாகேஷ் என்ற குற்றவாளியை பெங்களூரு போலீசார் கைது செய்ய அறிவியல்பூர்வமாக பல நவீன யுக்திகளை கையாண்டனர். ஆனால் அந்த யுக்திகள் பலன் கொடுக்காத நிலையில் பழமை வாய்ந்த யுக்தி குற்றவாளியை கைது செய்ய உதவியுள்ளது.

நாகேஷ் கைபேசி முழுவதுமாக அனைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவன் எங்கு உள்ளான் என்று காவல்துறையின் தனிப்படையினர் கண்டுபிடிக்க முடியாத நிலையில் நாகேஷ் முன்பு எங்கெல்லாம் தொடர்ந்து சென்று வந்துள்ளான் என்று இடங்களை பட்டியலிட்டு அந்தப் பகுதிகளில் நாகேஷ் புகைப்படம் இருக்கும் போஸ்டர்களை   பொது இடங்களில் ஒட்டியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தும் அவனை தேடி வந்தனர். 

திருவண்ணாமலையில் இருக்கும் குறிப்பிட்ட கோவிலுக்கு நாகேஷ் தொடர்ந்து பல வருடங்களாக வந்து செல்வதை அறிந்திருந்த காவல்துறையினர் நேற்று அந்த கோவிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவனது புகைப்படம் இருக்கும் போஸ்டர்களை ஒட்டி பொதுமக்களுக்கு அவை வழங்கியும் அவனைத் தேடி வந்த போது கோயிலில் நாகேஷ் இருப்பதை அடையாளம் கண்ட பொதுமக்கள் ஒருவர் காவல் துறைக்கு அழைத்து தகவல் கொடுத்துள்ளார். 

நாகேஷ் கோவிலில் இருக்கும் புகைப்படத்தை தனக்கு அனுப்பும் படி காவல்துறை ஆய்வாளர் அடையாளம் தெரிவித்த நபரிடம் கேட்ட போது அவருக்கு நாகேஷ் புகைப்படத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். புகைப்படத்தில் இருப்பது  நாகேஷ் தான் என்று அறிந்த பிறகு சுமார் அரை மணி நேரத்தில் குறிபிட்ட கோவிலுக்கு காவல்துறை அதிகாரிகள் சாமி தரிசனம் செய்வது போல் சென்று அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது கோவில் நிர்வாகிகள் கோவில் உள்ளே கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகேஷ் செய்த குற்றம் குறித்து விளக்கியவுடன் அனைவரும் விலகி சென்றுள்ளனர்.

நாகேஷ் இரண்டு வருடங்களுக்கு முன் தூய்மை செய்யும் ஒப்பந்ததாரர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் ஈமெயில் கணக்கை பயன்படுத்தி 500 எம்எல் ஆசிட் திருட்டுத்தனமாக வாங்கியுள்ளான். அதே ஆசிட்டை பயன்படுத்தி அவன் தான் காதலித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளான். தற்பொழுது துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகியுள்ள நாகேஷ் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.