போலி வாரண்ட் வைத்து பணம் பறிக்க முயற்சி; கைது செய்த போலீஸ்:

திருப்பூரில் போலி நீதிமன்ற வாரண்ட் மூலம், தொழிலதிபரை கடத்தி லட்சக்கணக்கில் பணம் பறிக்க முயற்சித்த, ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலி வாரண்ட் வைத்து பணம் பறிக்க முயற்சி; கைது செய்த போலீஸ்:

பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர், அதே பகுதியில் நூற்பாலை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சிலுக்குறிபேட்டில் உள்ள நிறுவனத்தில் இருந்து, 70 லட்ச ரூபாய்க்கு நூல் வாங்கியுள்ளார். இதற்கு 50 லட்சம் ரூபாய் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த நூலை துணியாக நெசவு செய்து, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைத்த போது, அதில் கலப்படம் இருப்பதாகக் கூறி, அத்துணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் 70 லட்சம் வரை தமிழ்ச்செல்வன் இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிலிகுறிப்பேட் பகுதியில் உள்ள பருத்தி ஆலையில் இருந்து, பல்லடம் வந்த ரவிக்குமார், வெங்கட  கிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர், தமிழ்ச்செல்வனிடம் தங்களுக்கு வரவேண்டிய 28 லட்சம் ரூபாய்க்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அது தொடர்பாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், தங்களுடன் வருமாறு அவர்கள் வற்புறுத்தியதால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வன், பிடிவாரண்டை ஆய்வு செய்ததில் அது போலி பிடியாணை என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, தமிழ்செல்வன் அளித்த புகாரின்பேரில், ஆந்திராவை சேர்ந்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் உடன் வந்த போலி போலீஸ்காரர் கோபி மற்றும் தம்ம நாயுடு, சத்திய நாராயண ராவ் ஆகியோரை தேடி வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள், ஆந்திராவில் உள்ள பருத்தி ஆலை ஒன்றில் வேலை செய்ததும், நூல் வியாபாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தமிழக தொழிலதிபரை பணத்திற்காக கடத்த முயற்சித்ததும் தெரிய வந்தது.