ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்.. பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை!

ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்.. பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை!

அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றிய நகை கடை உரிமையாளர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை தொடர்ச்சியாக பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 1லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 12 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக ஆயிரக்கணக்கான பொதுமக்களை ஏமாற்றிய நிறுவனம் ஏ.ஆர்.டி ஜுவல்லர்ஸ். சுமார் 427 முதலீட்டாளர்களிடமிருந்து 6.5கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி 7.5லட்சம் பணம், 80லட்சம் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள்,  வங்கி கணக்கில் இருந்த 3.5 லட்சம் ரூபாய் முடக்கம் செய்தனர். 

இவ்வழக்கில் நிறுவனத்தின் இயக்குனர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆரோன் தொடர்ச்சியாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருவதால் அவர்களை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஏ.ஆர்.டி ஜுவல்லரியில்  பணத்தை இழந்த  50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஏ.ஆர். டி ஜுவல்லரி நிறுவனத்தின் இயக்குனர்களை கைது செய்து பணத்தை திருப்பி பெற்று தர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட புஷ்பலதா, கடன் பிரச்சனையில் இருந்த போது ஏ.ஆர்.டி நிறுவன உரிமையாளர்கள் 1லட்ச ரூபாய்க்கு மாதந்தோறும் மூன்றாயிரம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதாகவும், ஆருத்ரா போல் மோசடி செய்யமாட்டோம் உலகிலேயே முதல் நிறுவனமாக கொண்டு வரும் முயற்சியில் தாங்கள் ஈடுபட உள்ளதாக என ஆசை வார்த்தை கூறியதாகவும் அவர் கூறினார். இதனை நம்பி திருமணத்திற்கு போட்ட நகையை விற்று 5லட்ச ரூபாய் முதலீடு செய்ததாகவும், சில மாதங்கள் வட்டி சரியாக வந்ததால் தனது கணவர், பழக்கமானோர் என சுமார் 20லட்ச ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் அவர் கூறினார். அதன் பிறகு திடீரென கடையை மூடிவிட்டு சென்றதால் பல முறை தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை என அவர் தெரிவித்தார். இதனால் தன்னை நம்பி பணத்தை முதலீடு செய்தோர் தனது கழுத்தை பிடிப்பதாக வேதனை தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து பேசிய கலா, கடந்த பிப்ரவரி மாதம் ஏ.ஆர்.டி நிறுவனத்தின் முகவர் 1லட்ச ரூபாய் முதலீடு செய்தால்  வாரந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியதை நம்பி 8லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதன் பின்னர் கடையை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும், உடனடியாக பணத்தை மீட்டு தரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து, அவர்களை புகார் கொடுக்க பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க:ஒரு பேருந்து நிழற்கூடத்தில் இத்தனை வசதிகளா?