காதலனுடன் ஊர் சுற்ற ரூ.12 லட்சம் கொள்ளை... கல்லூரி மாணவியை கைது செய்த காவல்துறை!

அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11. 90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காதலனுடன் ஊர் சுற்ற ரூ.12 லட்சம் கொள்ளை... கல்லூரி மாணவியை கைது செய்த காவல்துறை!

சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன் காலனி பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். 58 வயதான இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். குழந்தைகள் இல்லாததால் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் வளர்மதி என்கிற 45 வயது பெண்மணி கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வருகிறார். வளர்மதியின் மகள் சுமித்ராவும்  சிறுவயதிலிருந்தே இதே வீட்டில் அம்மாவுக்கு துணையாக பணியாற்றி வந்துள்ளார். தனக்கு பிள்ளைகள் இல்லாததால் அகஸ்டின் சுமித்ராவை சொந்த மகள் போல் வளர்த்து வந்துள்ளார். சுமித்ரா கல்லூரியில் படித்து வந்துள்ளார். 

அகஸ்டின் அரும்பாக்கம் பகுதியில் வீட்டு மனை ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்துள்ளார். தான் விருப்ப ஓய்வு பெற்ற போது கிடைத்த 20 லட்ச ரூபாயை வங்கியில் வைத்துள்ளார். அந்த பணத்தைக் கொண்டு வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதையடுத்து, சாலிகிராமத்தில் இருக்கும் இந்தியன் வங்கியில் பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் 8 லட்சம் ரூபாய் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி மேலாரை அனுகி முறையிட்டுள்ளார்.

அப்போது அகஸ்டினின் வங்கி பரிவர்த்தனைகளை மேலாளர் ஆய்வு செய்துள்ளார். அவரது வங்கி கணக்கில்   இருந்து கூகுள் பே வழியாக இரண்டு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கூகுள் பே எப்படி உபயோகிப்பது என்பது கூட தனக்கு தெரியாது என கதறியிருக்கிறார் அகஸ்டின். தொடர்ந்து வங்கி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அகஸ்டின் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணையில் அகஸ்டின் வீட்டில் வேலை பார்த்து வந்த வளர்மதியின் மகள் சுமித்ரா என்பவர் அகஸ்டின் மொபைலிலிருந்து அவருக்கு தெரியாமல் பிளே ஸ்டோர் மூலமாக கூகுள் பே செயலியை பதிவிறக்கம் செய்து அதிலிருந்து தனது காதலன் சதீஷ்குமார் பெயரில்  உள்ள இரண்டு வங்கி கணக்குகளுக்கு சுமித்ரா தினந்தோறும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பணத்தை சிறுகச்சிறுக அனுப்பி உள்ளது தெரியவந்தது.

காவல் நிலையத்தில் அகஸ்டின் புகார் கொடுத்தவுடன் சுமித்ரா மற்றும் காதலன் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரும் தலைமறைவாகினர். இதுதொடர்பாக அண்ணா நகர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை சைபர் கிரைம் போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்துவதால், தங்களை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து பெங்களூர், கேரளா, மும்பை என ஊர் ஊராக சுமித்ராவும் சதீஷ்குமாரும்  உல்லாசமாக சுற்றி திரிந்துள்ளனர். 

20 நாட்களுக்கு மேலாகியும் தங்களை காவல்துறை நெருங்காததால் தாயைப் பார்த்து விட்டு செல்லலாம் என சுமித்ரா சென்னை கோயம்பேடு வந்துள்ளார். அப்பொழுது சைபர் கிரைம் போலீசார் சுமித்ரா மற்றும் அவருடைய காதலன் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன் பிறகு அவர்களிடமிருந்து நான்கு புதிய செல்போன்கள் 79 ஆயிரம் ரொக்கப்பணம் இரண்டரை சவரன் தங்கச் செயின் மற்றும் புதிய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் இவர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பணத்தாசையில் முதலாளியின் வீட்டிலேயே திருடி, மானத்தை இழந்து, கல்லூரிப் படிப்பையும் இழந்து கம்பி என்னும்  நிலைக்கு சென்றுள்ளது சுமித்ராவின் வாழ்க்கை...