பிச்சை கேட்பது போல் வந்து மயக்க பொடி தூவி கொள்ளை... திருமண நாள் அன்று நகையை பறிகொடுத்த பெண்...

மண்டைக்காடு அருகே இளம்பெண் முகத்தில் மயக்க பொடி தூவி 25 பவுன் நகையை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிச்சை கேட்பது போல் வந்து மயக்க பொடி தூவி கொள்ளை... திருமண நாள் அன்று நகையை பறிகொடுத்த பெண்...

கன்னியாகுமரி மாவட்டம் மணலிவிளையை சேர்ந்தவர் பிரதீஷ்குமார்-ஸ்ரீஜா ஷாமிலி தம்பதிக்கு 3 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீஷ்குமார், நேற்று திருமண நாளை கொண்டாடுவதற்காக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார்.  பிரதீஷ்குமாரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரை குளச்சல் அருகே உள்ள வைத்தியசாலைக்கு பிரதீஷ்குமார் அழைத்து சென்றுள்ளார். 

கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜா ஷாமிலி தனது கணவரின் தங்கை பிரதி என்பவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, 2 ஆணும், ஒரு பெண்ணும், ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ஏதாவது பிச்சை போடுமா? என கேட்டுள்ளனர். உடனடியாக ஸ்ரீஜா ஷாமிலி, வீட்டில் யாரும் இல்லை, காசும் இல்லை என கூறியுள்ளார். ஆனாலும் அங்கிருந்து செல்லாத அவர்கள், முன்பக்க கதவை பலமாக தட்டி எதாவது தந்தால்தான் இங்கிருந்து கிளம்புவோம் என தெரிவித்துள்ளனர். இதனால் மர்மநபர்களின் செயலில் சந்தேகம் அடைந்த ஸ்ரீஜா ஷாமிலி, உடனே பின்பக்க கதவை திறந்து அருகே உள்ளே உறவினர்களின் வீட்டுக்கு செல்ல முற்பட்டுள்ளார்.

இதனை கவனித்த மர்மநபர்கள், அங்கு விரைந்து சென்று ஸ்ரீஜா ஷாமிலியின் முகத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் மயக்க பொடி மற்றும் மயக்க மையை தடவி உள்ளனர். இதில் அவர் சுய நினைவை இழக்க, ஸ்ரீஜா ஷாமிலி அணிந்திருந்த நகை, காப்பு, கம்மலை பறித்த மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து விட்டு ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் கைக்குழந்தையை அறையில் வைத்து பூட்டி விட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இதற்கிடையில் தனது அண்ணன் மனைவியின் செல்போன் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் நடத்து விட்டதாக எண்ணிய பிரதி தனது கணவருடன் அங்கு வந்து பூட்டப்பட்டிருந்த அறை கதவை திறந்து பார்த்த போது ஸ்ரீஜா ஷாமிலி கட்டிலில் கைக்குழந்தையுடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்ததோடு மண்டைக்காடு போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் டிஎஸ்பி தங்கராமன் மற்றும் செங்கோட்டு வேலவன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஜா ஷாமிலி மற்றும் அவரது கணவர் பிரதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதோடு கொள்ளை கும்பலை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் 10-கொண்ட தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து டிஎஸ்பி தங்கராமன் கூறுகையில், கழிந்த 3-நாட்களாக சந்தேகப்படும் படியான 3 பேர் கொண்ட மர்ம கும்பல் ஸ்ரீஜா ஷாமிலியிடம் யாசம் கேட்பது போல் தனியாக இருந்த அந்த வீட்டை கண்காணித்து நோட்டமிட்டு வந்துள்ளதாகவும் சந்தேகம் எழுந்த பின்னரும் பட்டதாரி பெண் அவசர போலீஸ் எண்ணுக்கோ காவல் நிலையத்திற்கோ தகவல் கொடுக்காத நிலையில் அந்த கும்பல் கச்சிதமாக கொள்ளையை அரங்கேற்றி சென்றுள்ளதாகவும் சந்தேகப்படும்படியான தெரியாத நபர்கள் தொடர்ந்து வீட்டிற்கு வந்தால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவித்தால் இது போன்ற கொள்ளை சம்பவங்களை தவிர்க்கலாம் என்றும் சுட்டி காட்டுகின்றனர். கப்பல் ஊழியர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் 3-வது திருமண நாளை கொண்டாட இருந்த நிலையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி வீடே கலையிழந்த நிலையில் கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாள் அன்று கொள்ளை சம்பவம் அரங்கேறியதால், வீடே கலையிழந்து காணப்பட்டது.