பயிற்சி டாக்டரை கடத்தி தாக்கிய தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்... சக மாணவியுடன் பழகியதால்  ஆத்திரம்...

பயிற்சி பல் டாக்டரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்டார்.

பயிற்சி டாக்டரை கடத்தி தாக்கிய தி.மு.க. பஞ்சாயத்து தலைவர்... சக மாணவியுடன் பழகியதால்  ஆத்திரம்...

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மகன் முருகப்பெருமாள் (வயது 25). இவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18-ந் தேதி மதியம் பணி முடிந்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தார்.  அப்போது அங்கு வந்த 3 பேர் முருகப்பெருமாளை காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரை ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் அடைத்து வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீண்டும் ஆஸ்பத்திரி அருகே இறக்கிவிட்டு மிரட்டி சென்றனர்.

இதில் காயம் அடைந்த முருகப்பெருமாள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

அப்போது, ஓட்டப்பிடாரம் முப்புலிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த அம்மாசி மகன் இளையராஜா (38) மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேரும் சேர்ந்து முருகப்பெருமாளை காரில் கடத்தி சென்று தாக்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இளையராஜாவை நேற்று கைது செய்தனர்.   கடத்தலுக்கு பயன் படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக  மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

பயிற்சி மருத்துவர் முருகப்பெருமாள் தன்னுடன் பயிலும் மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி வருவதாகவும், அது அப்பெண்ணின் தந்தைக்கு பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர்களின் குடும்ப நண்பரான இளையராஜாவிடம் இது குறித்து தெரிவித்ததின் அடிப்படையில் அவர், பயிற்சி மருத்துவரை கடத்தி மிரட்டியுள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

எனினும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளையராஜா ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவராகவும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக உள்ள அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராவார். 

ஏற்கனவே அதே அமைச்சரின் ஆதரவாளர் பில்லாஜெகன், விருந்தினர் மாளிகையில் தகராறு செய்த விவகாரத்தில் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில், அவரது மற்றொரு ஆதரவாளரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயிற்சி பல் டாக்டரை கடத்திச் சென்று தாக்கியதாக ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.