கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த விபரீதம் !!

மதுரை அலங்காநல்லூர் அருகே மரத்தில் ஏறி கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது. 2 வாலிபர்கள் கைது.

கொக்கு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த விபரீதம் !!

மதுரை மாவட்டம் மேலூர், கொட்டகுடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (38) டிவி மெக்கானிக். இவர் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தில் வசித்துவரும் தனது உறவினரான முத்துசெல்வி  வீட்டிற்கு வந்துள்ளார். முத்துசெல்வி வீட்டின் முன்னால் ஒரு புளியமரம் உள்ளது. அந்த புளியமரத்தில் இளைஞர்கள் சிலர் கொக்கு பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் அப்பகுதி இளைஞர்கள் சிலர் கொக்கு பிடிக்க வந்துள்ளனர். அப்போது வீட்டில் பெண்பிள்ளைகள் இருப்பதால் இங்கு இளைஞர்கள் வந்து கொக்கு பிடிக்க கூடாது என ராமமூர்த்தி கண்டித்துள்ளார். அப்போது இளைஞர்களுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கலைந்து சென்ற இளைஞர்கள், நேற்றிரவு தனது நண்பர்களை அழைத்து வந்து ராமமூர்த்தி, முத்துசெல்வியிடம் தகராறு செய்துள்ளனர்.  

மோதல் முற்றவே வாய்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அந்த இளைஞர்கள் ராமமூர்த்தியை கிரிக்கெட் விளையாடும் பேட்டால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை ஆட்டோ மூலம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு முத்துச்செல்வி அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகாபுரியை சேர்ந்த அன்பில் பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய இரு இளைஞர்களையும் கைது செய்தனர். மேலும் இருவர்மீதும் கஞ்சா விற்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.