தீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி!  

தீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் குவிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி!   

சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தீபா ரவிக்குமார். இவர் கேளம்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் தீபாவளி பண்டுச் சீட்டு நடத்தி வந்ததாகவும், வருடம் 6 ஆயிரம் ரூபாய் கட்டினால் வருட முடிவில் 8 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாகக் கூறி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீபாவளி பண்டுச் சீட்டை  நடத்தி வந்துள்ளார். ஆரம்ப கால கட்டத்தில் அனைவருக்கும் பணத்தை ஒழுங்காக திருப்பி கொடுத்த நிலையில், கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக பணம் கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்காமல், இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இவரை நம்பி பல பெண்கள் மேலும் பலரை இந்த தீபாவளி பண்டுச் சீட்டில் சேர்த்து விட்டதால் அவர்களுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று சென்னை கிண்டியிலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டமாகக் கூடி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கூடினர். அபோது பேசிய அவர்கள் மோசடியில் ஈடுபட்டவர்களை காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தங்களின் நிலை உணர்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட நபரை குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி பாதிக்கப்பட்ட மக்களை பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.