ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம்... 5 இளைஞர்கள் கைது.. 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...

சிவகாசியில் ஓட்டுநர் கொலை வழக்கில் 5 இளைஞர்களை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர். 

ஓட்டுநரை சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம்... 5 இளைஞர்கள் கைது.. 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெய்வானை நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். ஓட்டுநரான இவரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றது. படுகாயமடைந்த ஆனந்தராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மகேந்திரன், தினேஷ் குமார், செண்பகராஜன், ஹரிப்பிரியன் மற்றும் வெங்கடேஷ் குமார் ஆகிய 5 இளைஞர்களை கைது செய்தனர்.

விசாரணையில், ஆனந்தராஜின் தாயார் ராமலட்சுமி உடல் நலக்குறைவால் மருத்துவரின் ஆலோசனை படி வலி நிவாரண மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்த மாத்திரையில் சிறிதளவு ஆல்கஹால் கலந்திருப்பதாகவும், இதனை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மருந்தகத்தில் ஆனந்தராஜ் பெயரை பயன்படுத்தி மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும், இதனை ஆனந்தராஜ் தட்டிக்கேட்டதால் அவரை வெட்டி கொலை செய்ததாகவும் இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்னர். இதையடுத்து தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.