சொகுசு பேருந்தில் டிக்கெட் பரிசோதனையில் சிக்கிய போதைப்பொருள் !!

ஆம்பூரில் அரசு சொகுசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரண்டு பேர் மற்றும் ஓசூரில் பதுங்கி இருந்த கஞ்சா வியாபாரி உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சொகுசு பேருந்தில் டிக்கெட் பரிசோதனையில் சிக்கிய போதைப்பொருள் !!

சென்னை டூ ஓசூர்

சென்னையில் இருந்து ஓசூருக்கு பேருந்துகள் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் வெளியூரில் இருந்து வரும் பேருந்துகளிலும் பயணிகளிடமும் உடமைகளை சோதனை மேற்கொண்டனர்.

சொகுசு பேருந்து

இதில்  சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு சொகுசு  பேருந்து ஒன்றில் காவல்துறையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்  சோதனை மேற்கொண்டிருந்த நிலையில் பேருந்தில் இருந்த  இளைஞர்கள் இரண்டு பேர் பேருந்தில் இருந்து இறங்கி தப்ப முயற்சி செய்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர்  இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

சிக்கிய போதைப்பொருள்

இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் இளைஞர்களின் பைகளை சோதனை மேற்கொண்டதில் இரண்டு பைகளிலும் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஆம்பூர் நகர காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் இருவரும் ஓடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்கன்விரார் மற்றும் சரத் மாலிக் என்பதும் இவர்கள் 9 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்களை பையில் மறைத்து வைத்து பேருந்து மூலமாக  ஓசூருக்கு கடத்திச் செல்ல இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தீவிர விசாரணை

அதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கஞ்சா கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டதில் அடிக்கடி சென்னையில் இருந்து ஓசூருக்கு பேருந்து மூலம் கடத்தி சென்று அங்கு கஞ்சா வியாபாரி பலராமன் என்பவரிடம் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஓசூரில் பதுங்கி இருககும் முக்கிய குற்றவாளியை  பிடிக்க ஆம்பூர் டி. எஸ்.பி. சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்று சுமார் நான்கு மணி நேரத்திற்கு பின் ஒருவீட்டில் பதுங்கி இருந்த பலராமனை கைது செய்தனர்.

வழக்குப்பதிவு

பின்னர் 3 பேர் மீது போதை பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.  தமிழகம் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், ஆம்பூரில் ஓடும் பேருந்தில் ஒன்பது கிலோ கஞ்சா கடத்தி சென்ற இருவர் உட்பட 3 பேரை போலீசார் கைது  செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.