பர்ஸில் உள்ள பணத்திற்கு ஆப்பு வைக்கும் போலி 'ஆப்கள்'

போலி ஆப்கள் மூலம் ஏமாறாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.

பர்ஸில் உள்ள பணத்திற்கு ஆப்பு வைக்கும் போலி 'ஆப்கள்'

நாடு முழுவதும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பெரிதாக ஊக்குவிக்கப்படுகின்ற நிலையில் மத்திய அரசும், மக்களை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  தற்போது வணிக வளாகங்கள் தொடங்கி டீ கடை வரை, UPI பேமண்ட் முறை வந்துவிட்டதை அடுத்து சின்ன சின்ன தொகைகள் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நடந்து வருகிறது. பல ஆப்கள் மூலம் இந்த UPI பேமண்ட் நடந்துகொண்டு வருகிறது. மிக சுலபமாக பணத்தை, அனுப்பவும் பெறவும் முடியும் என்பதால், பயனாளர்களும் வணிகர்களும் இதை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இப்படி இருக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையில் தற்போது புது விதமான மோசடி நடக்கத் தொடங்கியுள்ளது. பணப்பரிவர்த்தனை முடிந்தவுடன் அதற்கான சான்றாக மொபைல் திரையைக் கடைக்காரரிடம் காண்பிப்பதும், பின்பு அவர்கள் அந்த தொகையைச் சரிபார்ப்பதும் வழக்கமாக நடந்துவரும் ஒன்று. ஆனால் தற்போது, இந்த திரை போன்ற போலியை உருவாக்கும் ஆப்கள், அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.

மொபைல் திரையில் வர விரும்பும் தொகை மற்றும் பணம் பெறுபவரின் பெயரை சொல்லிவிட்டால், ஒரு UPI பேமண்ட் ஆப்-இல் எவ்வாறு திரை தோன்றுமோ, அதே போன்ற திரை வந்துவிடும். மேலும், இந்த போலி ஆப்-களில் upi பேமண்ட் ஆப்-இல் வருவதைப் போன்ற ஒலியும் சேர்ந்து வருவது பார்ப்பவர்களுக்கு நிஜமாகப் பணப் பரிவர்த்தனை நடந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்திருக்காது. இதன்மூலம் வணிகர்கள் எளிதாக ஏமாறக்கூடும்.

வெறும் திரையைப் பார்த்து நம்பாமல், தங்கள் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதைச் சரிபார்த்துக் கொள்வதே, இதுபோன்ற போலி ஆப்கள் மூலம் மோசடி செய்வதிலிருந்து தப்புவதற்கான வழி என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.