வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி...!!

வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி...!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக பதிவுசெய்யபட்ட வழக்கில், சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் அரசு பேருந்து ஓட்டுனருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயம்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி, மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவர், கடந்த 2017ஆம் ஆண்டு 33 நபர்ககளிடம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் என 49 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, வீடு வாங்கித் தராமல் ஏமாற்றிய புகார் எழுந்தது.  இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த அந்தோணி என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

வாரியத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தனக்கு தெரியும் என்று கூறியதை நம்பி பணம் கொடுத்ததாகவும், பணத்தையும் கொடுக்காமல், வீட்டையும் வாங்கி கொடுக்காமல் சுரேஷ்பாபு மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார்.  இதுதொடர்பாக காவல்துறை டிஜிபி-யிடம் அளித்த புகாரில், சுரேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்தினர் மூவர் மீது 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனு நீதிபதி ஜெகதீஸ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, 25லட்ச ரூபாய்க்கான அசையா சொத்துக்கான ஆவணங்களை  எழும்பூரில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை சம்மந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பு, தினமும் மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க:  புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை...!!