போலி தங்க நகையை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி…  

சென்னையில் நூதன முறையில் போலி தங்க நகையை கொடுத்து 2 லட்சம் பணம் மற்றும் தங்க செயினுடன் தப்பிச் சென்ற பெண் உட்பட 3 வடமாநில நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

போலி தங்க நகையை கொடுத்து லட்சக்கணக்கில் மோசடி…   

சென்னை அயனாவரம் சோமசுந்தரம் 6வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி(35). இவர் வீட்டருகே பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கூல் டிரீங்ஸ் குடிப்பதற்காக ஒரு பெண் உட்பட 3 வடமாநில நபர்கள் வந்துள்ளனர். அப்போது லட்சுமியுடன் பேச்சு கொடுத்து தாங்கள் மெட்ரோ ரயில் பணியில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதே போல் கடந்த 6 ஆம் தேதி மெட்ரோ ரயில் பணியின் போது ஒரு குண்டு மணி கிடைத்ததாகவும், தங்கமா என சரிப்பார்த்து தருமாறு லட்சுமியிடம் கொடுத்து செல்போன் எண்ணையும் வாங்கி சென்றுள்ளனர். லட்சுமி அந்த நகையை கடையில் சோதித்து பார்த்த போது தங்கம் என தெரியவந்தது. இதே போல் அடுத்த நாள் மீண்டும் 2 குண்டுமணி தங்கத்தை சரிப்பார்க்க கூறியுள்ளனர்.இதே போல் தொடர்ந்து அந்த கும்பல் 10 நாட்களாக கடைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் 13ஆம் தேதி லட்சுமியை தொடர்பு கொண்ட அந்த நபர்கள் தங்களிடம் இதே போல் 50லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாகவும், அதை வாங்கி கொண்டு வெறும் 4 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளனர்.  இதனை நம்பிய லட்சுமி வீட்டிற்கு வரவழைத்து 50லட்சம் தங்க நகையை வாங்கி கொண்டு தன்னிடமிருந்த 2லட்சம் பணம் மற்றும் ஒரு சவரன் தங்க செயினை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். பின்னர் லட்சுமி தான் வாங்கிய தங்க குண்டுமணியை ஜுவல்லரி கடையில் கொடுத்து பார்த்த போது அனைத்துமே போலியான நகை என தெரியவந்தது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லட்சுமி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வடமாநில நபர்களை தேடி வருகின்றனர்.